சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வே அறிவித்து விட்ட தோனி இன்றளவிலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடி வருகிறார். சில பிரபல நடிகர்களுக்கு இருப்பது போன்ற ஒரு ஒரு மாஸும் தோனி என்ற பெயருக்கு பின்னால் உள்ளது. இவரது சமூக வலைத்தளங்கள் அதிகமாக ஆக்டிவாக இல்லை என்ற போதிலும், கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடவில்லை என்ற போதிலும் தோனி எங்காவது செல்லும் போது வெளியாகும் புகைப்படங்களே இணையத்தில் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு அதிகம் வைரலாகும்.
அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயரை எடுத்துள்ள தோனி, இன்னும் மூன்று மாதங்களில் ஐபிஎல் தொடரிலும் கால் பதிக்க உள்ளார். 43 வயதுக்கு மேல் ஆகும் தோனி, அடுத்த ஐபிஎல் தொடருடன் நிச்சயம் ஓய்வினை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்க சமீபத்தில் தோனி ஒரு நிகழ்ச்சியில் பேசிய சில விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்கள் என்றாலே தூரமாக விலகிச் செல்லும் தோனி, தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கத்திலும் கூட அரிதாக தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இருக்கையில் பிரபலங்களை சமூக வலைதளங்களில் அதிகம் பேச வைக்கும் பிஆர் பற்றியும் சில கருத்துக்களை தற்போது பகிர்ந்துள்ளார் தோனி.
“நான் ஒரு போதும் சமூக வலைத்தளங்களின் பெரிய ரசிகனாக இருந்ததில்லை. என்னுடன் இருந்த பல மேனேஜர்கள் அதை பயன்படுத்தும் படி என்னை அறிவுறுத்தினர். நான் 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அதன் பின்னர் தான் ட்விட்டர் தளம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கியது.
இதன் பின்னர் இன்ஸ்டாகிராமும் வந்தது. அப்போது அனைத்து மேனேஜர்களும் என்னிடம், ‘நீங்கள் PR வேலைகளில் மும்முரம் காட்டி நிறைய விஷயங்களை செய்யலாம் என என்னை அறிவுறுத்தினர். ஆனால் எனது பதில், ‘நீங்கள் நன்றாக கிரிக்கெட் ஆடினால் உங்களை விளம்பரம் செய்ய PR தேவையில்லை’ என கூறிவிட்டேன்” என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனி தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய கிரிக்கெட்டில் கோலி மற்றும் ரோஹித் பெயரில் அடிக்கடி ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு PR மூலம் சண்டை போட்டு வரும் நிலையில், தோனி சொன்னது அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பொருந்தும் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.