ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை சொன்னதும் தோனி எப்படி நினைவுக்கு வருகிறாரோ அதற்கு நிகராக நம் மனதிற்குள் வரும் பெயர் தான் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலரும் ஏராளமான சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு காலத்தில் ரெய்னா மேற்கொண்ட ஆட்டம் நிச்சயம் யாரும் நெருங்க முடியாது.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ரெய்னா களமிறங்கி ஏற்படுத்திய தாக்கத்தை விட சிஎஸ்கேவுக்காக அவர் செய்த விஷயங்கள் பட்டியலிடவே முடியாது. பல போட்டிகளில் சிஎஸ்கேவை தனியாளாக களத்தில் நின்று வெற்றி பெற வைத்துள்ள சுரேஷ் ரெய்னா, ஒரு சீசனில் ஆடாமல் போயிருந்ததும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவருக்கும் தோனிக்கும் ஏதோ பிளவு ஏற்பட்டது என்றும் சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுமென்றே வெளியேற்றியது என்றும் கூட குற்றச்சாட்டுகள் இருந்தது.
ஆனாலும் தோனி மற்றும் ரெய்னா என இருவருமே தற்போது வரையிலும் நட்பாக இருந்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வர்ணனையிலும் ஈடுபட்டு வருகிறார். இன்று புதிதாக ஐபிஎல் போட்டிகளில் சாதிக்க துடிக்கும் இளம் வீரர்களுக்கும் சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ரெய்னாவின் பல சாதனைகளை இன்னும் நெருங்க முடியாத சூழலும் உள்ளது.
இதற்கிடையே தான் சிஎஸ்கே அணியில் அவரது சிறந்த பார்ட்னரான தோனிக்கு ரெய்னாவின் முக்கியமான ஒரு சாதனையை முறியடிக்க அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 205 போட்டிகள் ஆடி, 5528 ரன்களை சேர்த்துள்ளார் சுரேஷ் ரெய்னா. தற்போது ஐபிஎல் வரலாற்றில் 8000 ரன்களை தொட்ட முதல் வீரராக விராட் கோலி இருந்தாலும் ஒரு காலத்தில் 2000 மற்றும் 3000 ரன்களை முதலில் தொட்ட வீரராக ரெய்னா தான் சாதனை படைத்திருந்தார்.
அவர் ஓய்வு பெற்ற பின்னர் ரோஹித், கோலி உள்ளிட்ட பலரும் அவரது ரன்னை தாண்டி நிறைய சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே 5528 ரன்களை ஐபிஎல் போட்டிகளில் அடித்துள்ள ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். அவர் சிஎஸ்கேவுக்காக 171 இன்னிங்ஸ்கள் ஆடி 4687 ரன்கள் சேர்த்துள்ளார்.
ரெய்னாவுக்கு அடுத்தபடியாக, 202 இன்னிங்ஸ்களில் 4669 ரன்களை தோனி எடுத்துள்ளார். இதனால், இன்னும் 19 ரன்களை தோனி அடுத்த சீசனில் சேர்க்கும் பட்சத்தில் சிஎஸ்கேவுக்காக அதிக ரன்கள் அடித்த ரெய்னாவின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.