2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தை அவ்வளவு எளிதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு தோனி அழைத்து செல்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கப்தில் அடித்த ஒரேயொரு ரன் அவுட் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது.
50 ரன்கள் எடுத்துவிட்டு பெவிலியன் நோக்கி தோனி சோகத்துடன் நடந்து வந்ததை ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரோகித் சர்மா உடைந்து அழுதுவிட்டார். இவ்வளவு ஏன், எதைப் பற்றியும் கவலைகொள்ளாத தோனி, அந்த நேரத்தில் தான் ஏன் கீழே விளாமல் ஓடினேன் என்று தெரியவில்லை என்று 3 மாதங்களுக்கு பின்னரும் உடைந்து பேசினார்.
அதுமட்டுமல்லாமல் அந்தப் போட்டியே தோனிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டியாக அமைந்தது. எந்த ரன் அவுட் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியதோ, அப்படியான ரன் அவுட் மூலமாகவே தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் தோனி ரசிகர்களும் நொறுங்கி போயினர்.
இந்த நிலையில் 2019 உலகக்கோப்பைத் தொடர்பாக யுவராஜ் சிங்கின் தந்தி கோக்ராஜ் சிங் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தோனியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விமர்சித்து யோக்ராஜ் சிங் பேசி இருக்கிறார். யுவராஜ் சிங் ஆடிய காலத்திலேயே அவர் தோனியை இதுபோன்று கடுமையாக விமர்சித்துள்ளர்.
அந்த வீடியோவில், 2019 உலகக்கோப்பை அரையிறுதியை நினைத்தால் என் இரத்தம் கொதிக்கிறது. வேண்டுமென்றே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக ஆடினார் தோனி. அவருக்கு தன்னை தவிர்த்து வேறு கேப்டனும் உலகக்கோப்பையை வெல்ல கூடாது என்ற எண்ணம் உள்ளது. ரவீந்திர ஜடேஜா சிறப்பாக எதிர்முனையில் ஆடிய போது, தோனி தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
தோனிக்கு இருக்கும் திறமையில் 40% வெளிப்படுத்தி இருந்தாலே இந்திய அணியால் வென்றிருக்க முடியும். 48வது ஓவரிலேயே தோனி இந்திய அணியை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால் அவருக்கு விராட் கோலி உலகக்கோப்பையை வாங்குவது பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.