இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இந்திய அணியின் ஒப்பில்லாத தலைவன் என்ற பெருமையை படைத்திருக்கும் தோனி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் உலகின் மிக விலைமதிப்பு மிக்க பேட்டை பயன்படுத்தி உலகக்கோப்பை போட்டியில் ஆடியவர் என்ற பெருமையை தோனி படைத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக தோனி 91 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்வார்.
இந்த போட்டியில் தோனி பயன்படுத்திய பேட் தான் தற்போது உலகின் விலை மதிப்புமிக்க பேட் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. குறிப்பாக அந்த பேட்டில் அவர் அடித்த சிக்சர் மூலம் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
அந்த தருணத்தை நாம் யாருமே மறந்திருக்க முடியாது. கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கரே நான் இறக்கும் தருவாயில் இந்த காட்சியை தான் நான் திரும்ப பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். அந்த அளவுக்கு இது பெருமைமிக்க தருணமாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் தோனி பயன்படுத்திய அந்த பேட் தற்போது ஏலத்தில் வந்திருக்கிறது. பாரம்பரியமிக்க பொருட்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் தோனியின் பேட் வந்தது.
குறிப்பாக கிரிக்கெட் வீரர் பயன்படுத்தும் பேட்டின் விலை சுமார் 4000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். ஆனால் தோனியின் பேட் சுமார் 83 லட்சம் ரூபாய் வரை ஏலத்திற்கு சென்றுள்ளது. இதன் மூலம் உலகின் விலை மதிப்புமிக்க பேட் என்ற பெருமையை அது பெற்றிருக்கிறது.
ஒரு காலத்தில் தோனி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் போது அவருக்கு ஸ்பான்சரே கிடைக்க வில்லையாம். ஸ்பான்சர் இல்லாத பேட் வைத்து தான் விளையாடி இருக்கிறார். ஆனால் தற்போது அவர் பயன்படுத்திய பேட் ஒன்று 83 லட்சம் ரூபாய் வரை சென்றிருக்கிறது.
இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் நிக்கோலோஸ் என்பவரின் பேட் தான் மிக விலை மதிப்பு மிக்க பேட்டாக கருதப்பட்டது. அந்த பேட் சுமார் ஒரு லட்சம் வரை ஏலத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை தோனி முறியடித்து இருக்கிறார்.