இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
சி.எஸ்.கே அணி பெற்ற இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி தான் காரணம் என்றால் அதுமிகையல்ல. ஏனெனில் அந்த அளவிற்கு இந்த ஆண்டு தோனி சென்னை அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தினார். நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடர் தான் சென்னை அணிக்காக தோனி விளையாடும் கடைசி தொடர் என்று பலராலும் பேசப்பட்டது.
ஆனால் தோனியோ கோப்பையை கைப்பற்றிய பின்னர் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் நான் இன்னும் ஒரு சீசனில் விளையாடப்போவதாக அறிவித்தார். எனவே தோனி அடுத்த 2024-ஆவது 17 ஆவது சீசனில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் தோனி அடுத்த சீசனில் முழு பிட்னஸ்ஸுடன் விளாயாடுவாரா? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.
ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடர் முழுவதுமே தோனி தனது முழங்காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக களத்தில் ரன்னிங் ஓடும் போதும், கீப்பிங் செய்யும் போதும் மிகவும் கஷ்டப்பட்டார். அதோடு லீக் சுற்றுகளில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு பின்னர் தனக்கு முழங்காலில் காயம் உள்ளதாகவும் அதனால் தன்னை அதிகமாக ஓட வைக்க வேண்டாம் என்றும் தமது சக வீரர்களிடம் கேட்டுக்கொண்டார். அதோடு ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் தனது முழங்காலில் அவர் ஐஸ் பேக் வைத்த படி அவர் இருந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் இப்படி முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தோனி அடுத்த வாரம் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதியாக உள்ளதாகவும், அப்போது அவரது காயத்திற்கான முழு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பரிசோதனைக்கு பின்னர் அவர் அங்கேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள போகிறார் என இன்சைடு ஸ்போர்ட்ஸ்(inside sports) செய்தி விளியிட்டுள்ளது. மேலும் ஒருவேளை அவரது காயம் குணமடைய அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதையும் தோனி மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ஒரு பாட்டில் தண்ணிய கொடுத்து மோஹித் ஷர்மாவோட மனச மாத்திட்டாங்க. குஜராத் அணி தோக்க இவங்க தான் காரணம் – சுனில் கவாஸ்கர்
அதே சமயம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தோனியின் உடல்நிலை குறித்த கேள்விகளைகளை சிஎஸ்கே செயல் அதிகாரி காசி விசுவநாதனிடம் கேட்டபோது, தோனியின் காலில் இருக்கும் பிரச்சனை என்ன? அதற்க்கு அறுவை சிகிச்சை தேவையா என்பதை எல்லாம் அவர் மருத்துவர்ககளிடம் அவர் ஆராய்ந்து வருகிறார். இது சம்மந்தமான எல்லா விதமான மருத்துவ அறிக்கைகளும் வந்த பிறகு தான் அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்ற முடிவை தோனி எடுக்கக்கூடும். சிஎஸ்கே நிர்வாகமும் இதை தீவிரமாக கவனித்து வருகிறது என்று கூறி உள்ளார்.