- Advertisement -
Homeவிளையாட்டு20 கிலோ குறைஞ்சா சிஎஸ்கே-ல இடம்.. ஆப்கானிஸ்தான் வீரரை கலாய்த்த 'தல' தோனி.. மனுஷன் அட்ராசிட்டி...

20 கிலோ குறைஞ்சா சிஎஸ்கே-ல இடம்.. ஆப்கானிஸ்தான் வீரரை கலாய்த்த ‘தல’ தோனி.. மனுஷன் அட்ராசிட்டி பண்ணிட்டாப்ல..

- Advertisement-

இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பையில், டிராவிட் தலைமையில் சச்சின், சேவாக் உள்ளிட்ட பலர் அடங்கிய இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது. தொடர்ந்து, அதே ஆண்டில் நடந்த முதல் டி 20 உலக கோப்பைக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட, இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பைத் தொடர், 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியின்ஸ் டிராபி என அனைத்தையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.மேலும் இந்திய அணி கடைசியாக வென்ற ஐசிசி கோப்பையும் அது தான். அதே போல, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமையும் தோனியை சாரும். தொடர்ந்து, தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, கோலி தலைமையில் சில காலம் ஆடி வந்த தோனி, 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடருக்கு பிறகு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடி வரும் தோனி, 2024 ஆம் ஆண்டிலும் ஆட உள்ளது உறுதியாகி உள்ளது. அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. நட்சத்திர வீரர்களை பெரிதாக தேர்வு செய்யாமல், வயதான சீனியர் வீரர்களை அணியில் சேர்த்து அவர்களின் அனுபவம் கொண்டு வெற்றி பெறுவதில் தோனிக்கு நிகர் யாருமில்லை. இதனால், 2024 ஆம் ஆண்டிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, தோனி பற்றி ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்கர் ஆப்கன் சொன்ன சில சுவாரஸ்ய தகவல், தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி இருந்த போட்டி டையில் முடிந்திருந்தது. இந்த போட்டிக்கு பின்னர் தோனியிடம் உரையாடினார் அஸ்கர் ஆப்கன்.

- Advertisement-

இது தொடர்பாக தற்போது பேசியுள்ள அஸ்கர் ஆப்கன், “அந்த போட்டிக்கு பிறகு, நான் தோனியுடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் ஒரு சிறந்த கேப்டன். இந்திய கிரிக்கெட்டிற்கு கடவுள் கொடுத்த பரிசு அவர். மேலும் தோனி ஒரு சிறந்த மனிதரும் கூட. அப்போது நாங்கள் முகமது ஷெஷாத் (ஆப்கானிஸ்தான் வீரர்) பற்றி நிறைய பேசினோம். அவர் மிகப்பெரிய தோனி ரசிகர். அவர் தோனி தலைமையில் ஆடவும் விரும்பினார்.

இது பற்றி நான் தோனியிடம் சொல்ல, அதிக எடையுள்ள ஷெஷாத், 20 கிலோவை குறைத்து விட்டு வந்தால் நான் ஐபிஎல் தொடரில் சேர்த்துக் கொள்கிறேன் என ஜாலியாக தோனி குறிப்பிட்டார். ஆனால், அதற்கு பின்னர் அணிக்காக ஆட வந்த ஷெஷாத், 5 கிலோ அதிக உடல் எடையுடன் வந்தார்” என தோனியுடனான சுவாரஸ்ய தருணம் பற்றி அஸ்கர் ஆப்கன் கூறியுள்ளார்.

சற்று முன்