ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே சிஎஸ்கே மற்றும் தோனி ஆகியோருக்கு இடையே இருக்கும் பந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பான ஏலத்தில் அவரை எடுத்ததில் இருந்து இன்று வரையிலும் சிஎஸ்கேவின் முகமாக இருந்து வருகிறார் தோனி. அவர்கள் 10 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளதுடன் 5 முறை ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி உள்ளனர்.
இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் சீசன்களில், 3 முறை மட்டும் தான் பிளே ஆப் வாய்ப்பையும் அவர்கள் தவற விட்டுள்ளனர். இப்படி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை பிளே ஆப் முன்னேறிய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறிய அணி என பல பெருமைகளையும் சிஎஸ்கே வசம் இருக்க முக்கிய காரணம் தோனி தான்.
அந்த அளவுக்கு சிஎஸ்கேவில் ஆடும் வீரர்களை மிக சிறப்பாக கையாண்டு, அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த தவறினாலும், தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அவர்களை நம்பர் 1 வீரராக மாற்றுவதில் தோனிக்கு நிகர் யாருமில்லை. இதற்கிடையே, நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் வாய்ப்பை இழந்திருந்தது.
தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனுடன் ஓய்வினை அறிவிப்பார் என்று தான் பல விதமான கருத்துக்கள் இருந்து வந்தது. ஆனால், அடுத்த சீசனில் ஆடுவாரா மாட்டாரா என்பது பற்றி அவரே இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தான் சிஎஸ்கே அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் வலி காரணமாக, ரன் ஓட சிரமப்பட்டு வந்த தோனி, விரைவில் அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதன் பின்னர் தான், அடுத்த சீசனில் ஆடுவதை தோனி முடிவு செய்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ள தோனி, இப்படி லீக் சுற்றுடன் ஓய்வு பெறக் கூடாது என்றும், அடுத்த சீசனில் கோப்பையை வென்று அவருக்கு ஃபேர்வெல்லை சிஎஸ்கே கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களின் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சிஎஸ்கே பற்றி தோனி கூறிய விஷயம், ரசிகர்களை மனம் உருக வைத்துள்ளது. “இந்தியர்களாக இருக்கும் போது நாம் ப்ரொபெஷனலாக இருப்பதை விட அதிகம் எமோஷனலாகவும் இணைந்திருப்போம். கிரிக்கெட் தொழில் என்பதை தாண்டி உணர்வுபூர்வம் தான் நமது பலம்.
அந்த வகையில், சிஎஸ்கே அணிக்கான எனது தொடர்பும் எமோஷனல் நிறைந்தது தான். ஒரு வீரர் வெறுமென இரண்டு மாதங்கள் வந்து ஆடி விட்டு போவது மாதிரியான பந்தம் கிடையாது. அதையும் தாண்டி மிகவும் உணர்வுபூர்வமான பந்தம்” என தோனி கூறியுள்ளார்.