இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் தொடரானது சென்னை அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசன் என்று கூறப்படுவதால் இந்தியா முழுவதும் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்து வருகிறது. அதோடு ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக தோனியை நேரில் காண லட்சக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக நிச்சயம் ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்து விட்டு அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக தோனி விளையாடுவார் என்று ஏற்கனவே தோனியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னா கூறியிருந்தார். அதற்கு ஏற்றாற்போல் இந்த தொடரானது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது 41 வயதை எட்டி விட்ட தோனி ரன்னிங் ஓடுவதில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். தனது கரியரின் சிறப்பான காலகட்டத்தில் தோனி சிறுத்தை போல ரன்னிங்கில் பாய்ந்து வந்ததை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வரும் வேளையில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் ரன்னிங் ஓடுவதில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
அதோடு அவரது முட்டியில் ஐஸ் பேக் வைத்தபடி இருக்கும் சில புகைப்படங்களும், முட்டியில் பேன்டேட் சுற்றியபடி விளையாடியும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன. அதுமட்டுமின்றி தோனியே இந்த தொடரின் ஒரு போட்டி முடிந்த பிறகு தனது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாலே பொறுமையாக ஓடுகிறேன் என்றும் என்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தோனி பயிற்சி செய்கையில் நொண்டி நொண்டி ஓடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு மணிக்கு 31 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிய தோனி இன்று ரசிகர்கள் உற்சாகம் அடைய வேண்டும் என்பதற்காக களத்தில் வந்து எப்படியாவது விளையாட வேண்டும் என்று பயிற்சி செய்து போட்டிகளில் வலியுடன் விளையாடி வருகிறார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் தோனி கொடுக்கும் அர்ப்பணிப்பை நினைத்து நெகிழ்ச்சியுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.