நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சிறப்பான விளையாட்டு மூலம் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த சீசனோடு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று வதந்திகள் எல்லாம் இருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி.
பைனல் போட்டியில் வென்ற பிறகு பேசிய தோனி, தான் தனது ரசிகர்களுக்காக தன்னுடைய உடல் ஒத்துழைத்தால் அடுத்து ஒரு சீசன் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்தார். அவரின் இந்த வார்த்தைகள் எல்லோ படைக்கு மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
அதே சமயம் இந்த சீசன் முழுவதுமே தோனி மூட்டு வலியால் சிரமப்பட்டார் என்பது நாம் அறிந்ததே. சீசன் முடிந்த உடனே அவர் தனது மூட்டுவலிக்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் தற்போது நல்ல முறையில் தேறி வருகிறார் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறி இருந்தார்.
இருப்பினும் தோனி தற்போது எப்படி உள்ளார் என்பதை ஒருமுறை கண்ணால் பார்த்தால் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தோனியின் மனைவி சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 23ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் தோனி தனது தோட்டத்தில் ஒரு பந்தை தூக்கி எறிய, அதை அங்கு உள்ள நாய்கள் போட்டி போட்டுக் கொண்டு கவ்வி எடுத்துக் கொண்டு வருகின்றன. இப்படியாக அந்த வீடியோ முழுக்க அவர் தனது நாய்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த தருணத்தில் தொனியோடு அவரது மகளும் உள்ளார்.
இந்த வீடியோவை கண்ட தோனியின் ரசிகர்கள், தோனியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படியே சென்றால் நிச்சயம் அடுத்த சீசனிலும் தல தரிசனம் உறுதி. இந்த ஒரு வீடியோ எங்களுக்கு போதும் என்று தோனி ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவிற்கு பின்னணியில் ஒரு அருமையான ஆங்கில பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது