2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை பெற்று, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது.
41 வயதிலும் கால்களில் காயத்துடன் சிங்கம் போல் சிஎஸ்கே அணியை வழிநடத்தி 5வது கோப்பையை வென்று கொடுத்தார் தோனி. அதுமட்டுமல்லாமல் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஜடேஜா மற்றும் ராயுடு ஆகியோரின் கைகளில் இருந்து ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொண்டு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தார் தோனி.
இதன் பின் உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் தோனி அனுமதிக்கப்பட்டு காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அங்கிருந்து சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற தோனி, இரு மாதங்களாக தீவிர ஓய்வில் இருந்தார். இதன் பின் காயத்திலிருந்து குணமடைந்ததாக கூறப்பட்டது.
இதன்பின் வீட்டிலேயே செல்லப் பிராணிகளுடன் தோனி தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ வெளியாகியது. இதன்பின் காயத்தில் இருந்து விடுபட்ட தோனி, அவரின் தயாரிப்பில் உருவான எம்ஜிஎம் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன் மூலம் தோனி தனது காயத்தில் இருந்து முழுமையாக விடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தோனி தனது வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு திரும்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 42 வயதிலும் கட்டுமஸ்தான உடல்நிலையுடன் உள்ள தோனியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து அவரை பாராட்டி வருகின்றனர்.
தோனி தனது உடற்பயிற்சியை தொடங்கியுள்ளதால், அடுத்த ஐபிஎல் சீசனில் நிச்சயம் விளையாடுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்காக இன்னொரு சீசன் விளையாட வாய்ப்புள்ளதாக தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.