பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி துவக்க வீரர்களில் ஒருவரானமுகமது நயிம் 32 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வெளியேற மறுபுறம் மெஹிதி ஹசன் மிராஸ் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்தார்.
அடுத்து வந்த வீரரான டவ்ஹித் ஹ்ரிடோய் பூஜ்யம் ரன்களில் வெளியேற அதன் பின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ களத்திற்கு வந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 105 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். அதே போன்று மெஹிதி ஹசன் 119 பந்துகளில் 112 ரன்கள் அடித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் நல்ல முறையில் ரங்களை சேர்க்க பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக பேட்டிங் ஆட களமிறங்கி ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் வெறும் ஒரே ரன்னில் வெளியேற மறுபுறம் இருந்த இப்ராஹிம் சத்ரான் சிறப்பாக ஆடினார். அதே சமயம் அடுத்து வந்த வீரர்களான ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி போன்ற வீரர்களும் தங்களுக்கான பணியை சிறப்பாக செய்தனர்.
இப்ராஹிம் சத்ரான் 74 பந்துகளில் 75 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதேபோல் ரஹ்மத் ஷா 57 பந்துகளில் 33 ரன்களும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 60 பந்துகளில் 51 ரண்களும் குவித்தனர். ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்களின் விக்கட்டுகள் மல மலவென சரிந்ததால் ஆப்கானிஸ்தான் அணியால் ஐம்பது ஓவர்கள் முழுமையாக களத்தில் நிற்க முடியவில்லை.
44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை தஸ்கின் அகமது நான்கு விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் மூன்று விக்கட்டுகளையும் ஹசன் மஹ்மூத் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா ஒரு விக்கட்டுகளையும் விழித்தனர்.
இந்த ஆட்டத்தில் முஜீப் உர் ரஹ்மான் விக்கெட் தான் பேசுபொருளாக மாறி உள்ளது. காரணம், அவர் தஸ்கின் அகமது வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று தூக்கி அடித்தார் ஆனால் துரதிஷ்டவசமாக அவரது கால் ஸ்டம்பின் மீது பட்டு அவர் ஹிட் விக்கெட் ஆனார். இது அவரது முதல் ஹிட் விக்கெட் கிடையாது. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய போது அவர் 26 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த போட்டியில் அப்ரிடி வீசிய பந்தை அவர் அடிக்க முயன்ற போது ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் பேட்டிங் செய்த அடுத்தடுத்த போட்டியில் தொடர்ச்சியாக ஹிட் விக்கெட்டான முதல் வீரர் என்ற மோசமான சாதனையை முஜீப் உர் ரஹ்மான் தற்போது படைத்துள்ளார். அதேபோல் அவர் ஹிட் விக்கெட்டான இரண்டு போட்டிகளிலுமே ஆப்கானிஸ்தான் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது