மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கீழே இருந்தது. ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து வெற்றிகளை சந்தித்து ப்ளே ஆஃப் செல்லும் அணிகளின் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் நேற்றையை ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்ல, இந்த போட்டியை வெல்வது முக்கியம் என்ற சூழலில் பரபரப்பாக நடந்து முடிந்தது இந்த போட்டி.
இந்த போட்டியுல் முதலில் பேட் செய்த லக்னோ அணி 3 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் சேர்த்தது. சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் அதிக சுழல்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தாது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. லக்னோ அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டாய்னஸ் 47 பந்துகளை சந்தித்த அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 87 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடக்கம்.
இதையடுத்து பேட் செய்த மும்பை அணியில் தொடக்க வீரர்களான இஷான் கிஷான் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்த பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற ஆரம்பித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 172 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு பின்னிறங்கியுள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன் ரேட் மைனஸில் இருப்பதால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியும் அந்த அணியை பாதிக்கும் வண்ணம் உள்ளது.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர், பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகளில் ஒன்றாவது அடுத்து தோல்விகளை சந்தித்து ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் இருக்க வேண்டும். ஆனால் ஒருவேளை அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இன்னும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.