நடப்பு ஐபிஎல் சீசன் மும்பை அணிக்கு ஒரு சிறந்த ஆரம்பமாக அமையவில்லை. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஆடி இருந்த மும்பை அணி தோல்வி அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தங்களின் இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டிருந்த நிலையில் அவர்கள் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்னான் 277-ஐ அடித்து சாதனை புரிந்திருந்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியும் சளைக்காமல் ஆடிய நிலையில் 246 ரன்கள் மட்டுமே அவர்களால் அடிக்க முடிந்தது. இதனால் இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்திருந்த மும்பை அணி மூன்றாவது போட்டியில் நிச்சயம் வெற்றிபெறும் என ரசிகர்கள் கருதினர்.
இதற்கு முக்கிய காரணம் முதல் இரண்டு போட்டிகள் எதிரணியின் சொந்த மைதானத்தில் நடந்தது. மூன்றாவது போட்டியில் மும்பை அணி தங்களின் சொந்த மைதானமான மும்பை வான்கடேவில் கால் பதித்திருந்தது. இந்த போட்டிக்கு முன்பாக நடந்து முடிந்த 13 போட்டிகளில் 12-ல் சொந்த மைதானத்தில் ஆடிய அணி தான் வெற்றி பெற்றிருந்தது.
இதனால் ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி வெற்றி பெற்று இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து இனிவரும் போட்டிகளிலும் அதே பயணத்தை தொடர்வார்கள் என ரசிகர்கள் கருதினர். ஆனால் இந்த போட்டியில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்த போது அவர்களின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் கொதித்து போயினர்.
ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் போல்ட் பிடியில் சிக்கிய மும்பை அணி முதல் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார். 20 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை மும்பை அணி இழக்க, ரோகித் சர்மா, நமன் திர், ப்ரேவிஸ் ஆகிய மூன்று விக்கெட்டுகளையும் போல்ட் எடுத்து இருந்தார். மேலும் இந்த மூன்று பேரும் முதல் பந்தில் கோல்டன் டக்காகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் திலக் வர்மா 32 ரன்கள் எடுக்க, அவருடன் இணைந்து ஆடிய ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இவர்களின் பின்னால் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடாததால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 125 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது. இந்த ஐபிஎல் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது மாறி இருந்த நிலையில் ராஜஸ்தான் தரப்பில் போல்ட் மற்றும் சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
எளிய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்திருந்தது. ஆனால், முந்தைய இரண்டு போட்டிகளை போல இளம் வீரர் ரியன் பராக் சிறப்பாக ஆடி ராஜஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நிற்க, 16 வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேற, மறுபுறம் மும்பை அணி 3 தோல்விகளுடன் கடைசி இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.