சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியிலிருந்து வந்து இந்திய அணியில் முக்கிய பௌலராய இடம் பெற்று தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்தவர் நடராஜன். தன்னைப் போன்ற எளிய மனிதர்கள் பலருக்கும் கிரிக்கெட் எந்த ஒரு தடையும் இன்றி கிடைக்க வேண்டும் என்ற கனவு நடராஜனுக்கு எப்போதுமே இருந்துள்ளது. அந்த வகையில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் என்ற தனது கனவை இன்று நினைவாக்கியுள்ளார் அவர்.
இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானமானது தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் அவர் உருவாக்கியுள்ளார். இதை இன்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். நடராஜனின் தாய் தந்தை முன்னிலையில் இந்த மைதானம் திறக்கப்பட்டது. அதேசமயம் இந்த திறப்பு விழாவிற்கு கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, நடிகர் யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் என பலரும் இந்த விழாவில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த பிறகு தினேஷ் கார்த்திக் பேசுகையில்,
பொதுவாகவே பலருக்கும் ஆரம்ப நிலையில் பலர் உதவி இருப்பார்கள். ஆனால் பலரும் அவர்களை மறந்து விடுவார்கள். ஆனால் நடராஜன் அப்படி கிடையாது. தனக்கு உதவி செய்த ஒவ்வொருவரையும் அவர் நினைவில் வைத்துள்ளார். அதே சமயம் அவர்களுக்கு நன்றியாகவும் உள்ளார். அதேபோல தன்னுடைய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் கிரிக்கெட் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் அதற்காக அவர் பல நல்ல செயல்களை செய்து வருகிறார். அப்படியான ஒன்று தான் இந்த மைதானமும்.
ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்து பெரிய அளவில் சாதிக்க முடியும் என்றால் அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பவர் தோனி தான். அவருக்கு அடுத்து சின்னப்பம்பட்டி என்ற சிறிய ஊரிலிருந்து உலக அளவில் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடராஜன் தான் என்றால் அது மிகையாகாது என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
இந்த மைதானத்தை பொருத்தவரை, இதில் இரண்டு பயிற்சித் தடங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இதில் நான்கு பிச்சுகள் உள்ளன. கேண்டின் வசதி, ஜிம், தங்கும் வசதி, மற்றும் 100 பேர் அமர்ந்து போட்டியை காணக்கூடிய வகையில் கேலரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானமானது நிச்சயம் பலருக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், நான் பல வருடங்களுக்கு முன்பு கண்ட கனவு இன்று நினைவாகி உள்ளது. இந்த மைதானத்தின் மூலம் சிறந்த பிலேயர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார். மேலும் கட்டண விவரங்கள் குறித்து பேசுகையில், இது இலவசம் கிடையாது. இதை பராமரிப்பதற்காகவும் இங்குள்ளவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பதற்காகவும் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறி உள்ளார்.