தற்கால வீரர்கள் பலரும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதை காட்டிலும் அதிகமாக டி20 போட்டிகளிலேயே விளையாட விரும்புகிறார்கள். டெஸ்ட் போட்டியில் கூட சிலர் விளையாட விரும்பினாலும், ஒரு நாள் போட்டியில் விளையாட தயக்கம் காட்டுகின்றனர். அதற்க்கு மிக முக்கிய காரணம் ஒரு நாள் போட்டியில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும், அதிக உழைப்பு தேவைப்படும் என்பதே.
இந்த நிலையில், இந்திய ரசிகர்களிடம் அதிகம் பரிச்சயம் ஆன ஆப்கனிஸ்தான் வீரரான நவீன் உல் ஹக் தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 24 வயதாகும் இவர் இதுவரை ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். T20-ல் 27 போட்டிகளில் 20.70 சராசரியில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். செப்டம்பர் 2016ஆம் ஆண்டு பங்களாதேசத்திற்கு எதிரான அவரது முதல் போட்டி நடைபெற்றது.
அவர் கடைசியாக தனது நாட்டிற்காக 50 ஓவர் போட்டியை ஜனவரி 2021ஆம் ஆண்டு அபுதாபியில் அயர்லாந்திற்கு எதிராக விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது விராட் கோலியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன், பல சர்ச்சைகளில் சிக்கினார். அப்போதிருந்து, அவர் மீது இந்திய ரசிகர்களின் பார்வை விழுந்தது.
இந்த நிலையில், நவீன் உல் ஹக் இன்று ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இனி 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என கூறியிருக்கிறார்.
எனது நாட்டிற்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் இந்த உலகக்கோப்பை தொடரோடு ஒரு நாள் போட்டியில் இருந்து நான் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். ஆனால் டி20 போட்டிகளில் எனது நாட்டிற்காக இதே நீல நிற ஜெர்சியோடு விளையாடுவேன்.
இது ஒரு சுலபமான முடிவு கிடையாது. எனினும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நீடிக்க செய்ய இது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், என்னை ஆதரித்து அன்பு செலுத்திய என்னுடைய ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நவீன் பதிவிட்டார்.
வரும் அக்டோபர் 6ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பங்களாதேசத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.