ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். அப்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே நடைபெற்ற மோதல் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்தது. அந்த போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி, கௌதம் கம்பீர், நவீன் உல் ஹக் என மூவருமே களத்தில் காரசாரமாக மோதிக்கொண்டனர். அந்த விடயம் அப்போது பெரிய அளவில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகெங்கிலும் நடைபெறும் பிரான்ச்சைசி கிரிக்கெட்டில் விளையாடி வரும் நவீன் உல் ஹக் இம்முறை ஐபிஎல் தொடரில் கோலியுடன் நடத்த நிகழ்வு குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : போட்டி முடிந்த பின்னர் நான் வழக்கம் போலவே மைதானத்தில் இருந்து வெளியேறினேன். அதேபோன்று அந்த சண்டையையும் நான் துவங்கவில்லை. விராட் கோலி தான் கை கொடுக்கும் போது மீண்டும் என்னிடம் சண்டையை ஆரம்பித்தார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியில் வழங்கப்பட்ட அபராதத்தின் அடிப்படையிலேயே யார் தவறு செய்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். எப்பொழுதுமே நான் யாரையும் போட்டிக்கு பின்பு ஸ்லெட்ஜிங் செய்வது கிடையாது. ஒரு பந்துவீச்சாளராக பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது ஆக்ரோஷமாக சில செயல்களில் நான் ஈடுபடுவேன். ஆனால் போட்டிக்கு பின்னர் ஒரு வார்த்தை கூட யாரையும் ஸ்லெட்ஜிங் செய்தது கிடையாது.
ஆனால் இந்த போட்டியில் ஆட்டம் முடிந்த பின்னர் கை கொடுக்க வந்த விராட் கோலி என்னுடைய கையை வலுவாக பிடித்து அழுத்தினார். அதனாலே நான் அதற்கு ரியாக்ட் செய்தேன் என்று நவீன் உல் ஹக் கூறியுள்ளார். மேலும் போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்களும் நான் ஒவ்வொரு முறை பந்துவீச வரும் போதும் எதிர்மறையான முழக்கங்களை எழுப்பினார்கள்.
ஆனால் அதுபோன்ற செயல்களை நான் பெரிதாக என் மனதுக்குள் எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் மைதானத்தில் இருக்கும் 80 ஆயிரம் ரசிகர்களிடம் நான் தனித்தனியாக எதுவும் சொல்ல முடியாது. அதனை தவிர்த்து என்னுடைய பந்துவீச்சில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். என்னுடைய பந்துவீச்சில் நான் வெளிப்படுத்தும் என்னுடைய திறன் தான் அவர்களுக்கான பதில் என விராட் கோலியுடனான அந்த சம்பவம் குறித்து நவீன் உல் ஹக் பேசியுள்ளார்.
நவீன் உல் ஹக் குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் : போட்டி முடிந்த பின்னர் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியிருக்கு போட்டியின் முழு ஊதியமும், அதேவேளையில் நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவீதம் மட்டுமே அபராதம் விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.