இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் தற்போது இந்திய அணிக்கு எழுந்திருக்கும் ஒரு முக்கியமான சிக்கலை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் சிறந்த வீரர்களை கொண்டு ஆடும் லெவனை தேர்வு செய்வார்.
அதில் சில வீரர்கள் சொதப்பினால் கூட அவர்களுக்கு ஒரு சில வாய்ப்புகளை கொடுத்து விட்டதன் பின்னர் தான் அணியில் மாற்றங்களை உருவாக்குவார். ஆனால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் என கலவையாக தான் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கவுதம் கம்பீர் முதல் முறையாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தான் டெஸ்ட் அணியை செயல்படுத்த உள்ளார். இதில் பல சவால்கள் அவருக்கு முன்பு காத்திருக்க முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் பெரிய அளவில் குழப்பங்கள் இல்லாத அதே வேளையில் அதை தாண்டி உள்ள சில இடங்களில் எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் சில சிக்கல் எழுந்துள்ளதாகவே தெரிகிறது. ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால், கில், கோலி உள்ளிட்டோர் இடம்பெற அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
இதே போல வேகப்பந்து வீச்சிலும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளதால் ராகுல் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. சர்பராஸ் கான் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தாலும் அதில் கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி ரன் சேர்த்திருந்தார்.
ஆனால் அதே வேளையில் ராகுல் சீனியர் வீரர் என்பதால் யார் தேர்வாவார் என்பது குழப்பமே. இதே போல அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் நிச்சயம் ஆடுவார்கள் என்பதால் குல்தீப் அல்லது அக்சர் படேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இரண்டு பேருமே நல்ல ஃபார்மில் இருப்பதால் அந்த முடிவும் இந்திய அணிக்கு தலைவலி தான்.
இதைத் தாண்டி, இந்தியாவில் வைத்து போட்டிகள் நடைபெற உள்ளதால் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. பும்ரா இடம் உறுதியாக இருப்பதால் சிராஜ், யாஷ் தயாள் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரில் ஒருவர் அல்லது டாஸை பொறுத்து இரண்டு பேரை களமிறக்கலாம் என்றும் தெரிகிறது.
இப்படி நிறைய பிரச்சனைகள்இருப்பதால் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் என்ன முடிவை எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.