உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது லீக் போட்டியில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் இலங்கை அணி தரப்பில் நிசாங்கா – குசல் பெரெரா இணை களமிறங்கியது. அதில் நிசாங்கா 2 ரன்களிலும், மெண்டிஸ் 6 ரன்களிலும், சமரவிக்ரமா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக ஆடிய குசல் பெரெரா 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 51 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் நிதானமாக ஆடிய தீக்சனாவின் ஆட்டத்தால் இலங்கை அணி 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
சிறப்பாக ஆடிய தீக்சனா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே – ரச்சின் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிறப்பாக ஆடிய கான்வே 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 45 ரன்கள் விளாசினார். தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 34 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் மேத்யூஸ் பந்துவீச்சில் 14 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
இதனால் நியூசிலாந்து அணி 130 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடியது. பின்னர் மிட்செல் அதிரடியாக ரன்கள் குவிக்க, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. இதன்பின் டேரில் மிட்செல் செய்த தவறால், சாப்மேன் 7 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் 145 ரன்களுக்கு நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கடைசியால கிளென் பிலிப்ஸ் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி நியூசிலாந்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலமாக இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியதோடு, அரையிறுதி வாய்ப்பையும் ஓரளவிற்கு உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.