ஐபிஎல் 2023-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமம் செய்தது. இது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தாலும், சென்னை அணையின் பாகுபலி என்று அழைக்கப்படும் அம்பாதி ராயுடு இந்த ஐபிஎல்-லோடு அனைத்து தரமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று வருத்தமாகவே உள்ளது. அதே சமயம் இறுதிப் போட்டியின் முடிவில் ராயுடு ரசிகர்களுக்கு கண்ணீருடன் விடை கொடுத்தார்.
இதையடுத்து அம்பாதி ராயுடு அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதனால் கிரிக்கெட் களத்திற்கு மீண்டும் ராயுடு வரப் போவதில்லை என்று ரசிகர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் தொடங்கவுள்ள மேஜர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு டூ பிளஸிஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ரசிகர்கள் பலரும் ராயுடுவின் ஆட்டத்தை பார்க்க தயாராக இருந்தனர். ஆனால் பிசிசிஐ குழுவினர் எடுத்த முக்கியமான முடிவு காரணமாக அம்பாதி ராயுடு மேஜர் லீக் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பிசிசிஐ ஆய்வுக் குழு கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்த பின்னர், உடனடியாக வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாடுவதை தடுக்கும் வகையில் ”கூலிங் ஆஃப்” காலத்தை அறிமுகம் செய்யப் போவதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் கிரிக்கெட் வீரர்கள் முன் கூட்டியே ஓய்வுபெறுவதை தடுக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வெளிநாட்டு டி20 கிரிக்கெட் லீக்களில் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் பங்கேற்பதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அம்பாதி ராயுடு அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில், மேஜர் லீக் தொடரின் முதல் சீசனில் இருந்து அம்பாதி ராயுடு சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதனால் இம்முறை டெக்ஸாஸ் அணிக்காக இந்தியாவில் இருந்து ஆதரவளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக இந்திய கிரிக்கெட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்கள் விரைவாக ஓய்வை அறிவித்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்கள். இந்திய அணியின் நட்சத்திர வீரராக வர வேண்டிய உன்முக்த் சந்த் போன்ற வீரர்கள், இந்தியாவில் ஓய்வை அறிவித்துவிட்டு அமெரிக்காவில் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். தற்போது லீக் போட்டிகளும் தொடங்குவதால், 35 வயதிற்கு மேல் உள்ள வீரர்கள் பலரும் முன் கூட்டியே ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் பிசிசிஐ நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.