தற்போதைய மாடர்ன் டி20 கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர் போனவர், நிக்கோலஸ் பூரன். வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இவர், பல டி20 தொடர்களில் தனது அதிரடியான பேட்டிங்கால் அசரடித்துள்ளார். ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிராக 19 பந்துகளில் 7 சிக்ரசர், 4 பவுண்டரி என 62 ரன்கள் விளாசி லக்னோ அணியை வெற்றிபெற வைத்தார்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக இறுதி போட்டியில் அதிரடி சதம் விளாசினார். அதுவும் 184 ரன் சேஸில், 40 பந்துகளில் சதம் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 10 பவுண்டரி, 13 சிக்சர் என 55 பந்துகளில் 137 ரன்களை விளாசி மும்பையை சாம்பியன் ஆக்கினார்.
தற்போது மீண்டும் அப்படியொரு சம்பத்தை சிபிஎல் தொடரிலும் அரங்கேற்றியுள்ளார். சிபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் (டிகேஆர்) அணி, பார்படாஸ் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டிரினிடாட்-ல் நடைபெற்ற போட்டியில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் மார்க் டெயால் 6 ரன்களில் ஆட்டமிழக்க மூன்றாவது ஓவரிலேயே களமிறங்கிய பூரன், முதலில் சற்று அடக்கியே வாசித்தார். பின் அவ்வபோது பவுண்டரிகள் அடிக்க, 16வது ஓவரில் அரைசதம் கடந்தார். அதன்பின் அதே ஓவரில் மூன்று சிக்சர்களை விளாசி தனது ஆட்டத்தை சிக்சர், பவுண்டரி மோடுக்கு மாற்றினார்.
ஓவருக்கு ஓவர் பவுண்டரி, சிக்சர் என வானவேடிக்கை காட்டிய அவர் 19வது ஓவரின் முடிவில் 86 ரன்களில் களத்தில் இருந்தார். இதனால் சதம் அடிக்க அவருக்கு 14 ரன்கள் தேவை. கைல் மேயர்ஸ் வீசிய இறுதி ஓவரின் முதலிரண்டு பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஃபுல் டாஸ் பந்தை ஸ்கோயர் லெக் திசைக்கும், ஓவர் பிட்ச்சில் வீசிய பந்து லாங் ஆன் திசையிலும் பந்து பறந்தது.
பின் நான்காவது பந்து ஃபுல்டாஸாக அமைய, அதை மீண்டும் பேக்வுட் ஸ்கோயர் லெக் திசைக்கு பவுண்டரி அடித்து சதம் விளாசினார். இவரது அதிரடியால் டிகேஆர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. பூரன் 53 பந்துகளில் 5 பவுண்டரி, 10 சிக்சர் என 103 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் அடித்த சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை மட்டும் வைத்து பார்த்தால் 15 பந்துகளில் 80 ரன்கள் அடித்துள்ளார். இந்த போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 192.45.
Nicholas Pooran is one the cleanest hitters going around!
Exhibit 👇🏻#CPL2023 #CPLonFanCode pic.twitter.com/MjGDevnnQl— FanCode (@FanCode) September 7, 2023
முதல் 36 பந்துகளில் அரைசதம் எடுத்த அவர், பின் 15 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரி என 50 ரன்களை எடுத்து வானவேடிக்கை காட்டினார். இது சிபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 2வது சதமாகும். இதைத்தொடர்ந்து களமிறங்கிய பார்படாஸ் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டிகேஆர் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பூரனின் இந்த அதிரடி இன்னிங்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.