இந்திய அணிக்கு எதிராக நேற்று கயானா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அவ்வேளையில் நான்காவது வீரராக களம் புகுந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் நான்கு சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி என 67 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தற்போது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது என்று கூறலாம்.
அவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வேளையில் நேற்றைய போட்டியில் அம்பயருடன் ஏற்பட்ட சண்டையும் தற்போது அதிக அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் துவக்க வீரரான கைல் மேயர்ஸ் 7 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரி என 15 ரன்கள் அடித்திருந்த போது அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
ஆனால் அவர் ஆட்டமிழந்த போது தான் நிக்கோலஸ் பூரான் அம்பயரிடம் சண்டை போட்ட சம்பவம் நடைபெற்றது. அதாவது கைல் மேயர்ஸ் தான் ஆட்டம் இழந்ததாக தெரிந்ததும் நடுவரிடம் டிஆர்எஸ் கேட்டார். அப்போது ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பின் பையில் மேல் அடித்ததாக காண்பிக்கப்பட்டது.
இதன் காரணமாகவே அந்த முடிவினை ஏற்றுக்கொள்ள மனமில்லாத பூரான் களத்தில் இருந்த நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
— rajendra tikyani (@Rspt1503) August 7, 2023
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக இறுதிப்போட்டியில் சதம் அடித்து அந்த அணியை வெற்றி பெற வைத்த நிக்கோலஸ் பூரான் தற்போது இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.