இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகளில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தத் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோற்று இருந்தாலும் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் தனது பலத்தை நிரூபித்தது. எனினும் ஐந்தாவது போட்டியில் மிக மோசமான ஒரு தோல்வியை இந்திய அணி சந்தித்தது.
பரிசோதனை என்ற பெயரில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இளம் வீரர்களாக இந்த தொடரில் களம் இறங்கி இருந்தனர். ஆனால் இந்த பரிசோதனை வெற்றி பெற்றதா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூற வேண்டும்.
மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா. அடுத்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் முடிந்தால் என்னை அடித்துப் பார்க்கட்டும், அது போன்ற ஒரு ஆட்டத்தை தான் நானும் விரும்புகிறேன் என்ற வகையில் பேசி இருந்தார். இதை அப்படியே நிக்கோலஸ் பூரன் மனதில் வைத்திருந்தாரோ என்னமோ தெரியவில்லை, ஹர்திக் பாண்டியாவின் ஓவரை ஐந்தாவது போட்டியில் அவர் வெளுத்து கட்டினார். பாண்டியா வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் நிக்கோலஸ் பூரன் 35 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்தாவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவர் தூணாக நின்று மிகப்பெரிய பணியை செய்தார் என்றே கூற வேண்டும்.
ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கும். அதாவது இதுவரை முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று அடுத்து மூன்று போட்டிகளை தொடர்ச்சியாக வென்று தொடரையும் வென்ற ஒரு அணி ஏதும் இல்லை. அந்த சாதனையை படைப்பதற்கான வாய்ப்பு இந்திய அணியிடம் இருந்தது. ஆனால் அது கைநழுவில் சென்றது.
இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ஓவரில் நிக்கோலஸ் பூரன் விலாசியத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்துள்ளார். அதே சமயம் அவர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் நிக்கோலஸ் பூரன் தனது வாயை ஜிப் போட்டு மூடுவது போன்று ஒரு செய்கை செய்துள்ளார். அதோடு அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் அகேல் ஹுசைன் அசால்டாக ஊதி தள்ளுவது போல் ஒரு செய்கை செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.