இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் டெஸ்ட் வடிவத்தில் நடைபெறும் துலீப் டிராபி தொடரும் மிக முக்கியமான ஒரு தொடராகும். ஏனெனில் துலீப் டிராபி போன்ற உள்நாட்டு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பும் கூட இருப்பதினால் இந்த தொடர்களில் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வீரர்கள் விரும்புவார்கள்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் வைத்து ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த உள்நாட்டு தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த துலீப் டிராபி டெஸ்ட் தொடரின் காலிறுதி போட்டியில் வடக்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்கள் தற்போது மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வடகிழக்கு மண்டலம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடி வரும் வடக்கு மண்டல அணியானது தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியின் போது வடக்கு மண்டல அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
வடக்கு மண்டல அணி சார்பாக துவக்க வீரர் துருவ் ஷோரி 211 பந்துகளை சந்தித்து 135 ரன்கள் எடுத்தார். அதேபோன்று ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து 245 பந்துகளை சந்தித்து 150 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 86 பந்துகளை சந்தித்து 122 ரன்கள் குவித்து அசத்தினர்.
அதிலும் குறிப்பாக நிஷாந்த் சிந்து என்கிற சிஎஸ்கே அணியின் இளம் வீரரான இவர் 245 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 150 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 19 வயதான இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிஷாந்த் சிந்து கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 60 லட்சரூபாய் தொகைக்கு வாங்கப்பட்டிருந்தார்.
ஜடேஜா போன்றே பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தும் வீரராக பார்க்கப்படும் இவர் எதிர்காலத்தில் நல்ல ஆல்ரவுண்டராக விளங்குவார் என்பதனாலே அவரை ஏலத்தில் எடுத்திருந்தார் தோனி. கடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் யாஷ் துள் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய இவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே சிறப்பான திறமை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.