இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடிவரும் சூழலில் பல இடங்களில் அவர்கள் கடுமையாக சொதப்பி இருந்தார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. 4 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 30 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கைப்பற்றியிருக்க, அவர் மட்டும் ஏதாவது காரணத்தினால் இந்த தொடரில் ஆடாமல் போயிருந்தால் நிலை என்னவாகி இருக்கும் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அவர்கள் குறிப்பிடுவது போல, பும்ரா இல்லை என்றால் முதல் 3 டெஸ்ட்களிலும் இந்திய அணி நிச்சயம் மிக பரிதாபமாக தோற்றிருக்கும். பும்ரா அந்த அளவுக்கு இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தி பல சாதனைகளை உருவாக்கி இருந்தது போல, இந்த தொடரில் அறிமுகமான நிதிஷ் ரெட்டியும் பெரிய அளவில் பெயர் எடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.
ரோஹித், கோலி, கில் உள்ளிட்ட பல நட்சத்திர பேட்ஸ்மேன், இரண்டு இலக்க ரன்னை எட்டவே பெரும்பாடு படும் நிலையில், நிதிஷ் ரெட்டியோ கம்மின்ஸ், ஸ்டார்க், போலண்ட் என ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறந்த ஆல் ரவுண்டராக ஹைதராபாத் அணியில் பெயர் எடுத்த நிதிஷ் ரெட்டி, அதே வேகத்தில் இந்திய அணிக்காகவும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெஸ்ட் அணியிலிலும் நிதிஷ் ரெட்டிக்கு இடம் கிடைத்த போது பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர். ஆனால் இதுவரை நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் பல சிறந்த இன்னிங்சை ஆடியிருந்த நிதிஷ், சதமடித்தும் அவர்களது கருத்தை பொய் என நிரூபித்துள்ளார். இந்த நிலையில் தனது ஆட்டம் பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கும் தகுந்த பதிலை தற்போது தெரிவித்துள்ளார் நிதிஷ் ரெட்டி.
“சில பேர் நான் டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடித்த போது என் மீது சந்தேகப்பட்டனர். ஐபிஎல் தொடரில் ஆடிய ஒரு இளம் வீரர், டெஸ்ட் அரங்கில் அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக ஆடவே மாட்டார் என அனைவருமே குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் நினைத்தது தவறு என நிரூபிக்க நான் முடிவு செய்தேன். இந்திய அணிக்காக எனது 100 சதவீதத்தையும் நான் கொடுப்பேன் என அப்படி குறிப்பிட்ட மக்களிடம் நான் காண்பிக்க வேண்டுமென விரும்பினேன்” என நிதிஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் தந்தை பற்றி உருக்கமாக பேசிய நிதிஷ் ரெட்டி, “நான் எதுவும் இல்லை என்றே போதே என் மீது நம்பிக்கை வைத்து வேலையை தியாகம் செய்தார். என்னை முதலில் நம்பிய அவரை போல தந்தை கிடைத்ததற்கு நான் என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளேன்” என நிதிஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.