இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த போது வெறும் 5 மைதானங்களை மட்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். கொல்கத்தா, மும்பை, சென்னை, மொஹாலி மற்றும் டெல்லி ஆகிய மைனாங்களில் மட்டும் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்தார்.
ஏனென்றால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வெறும் 5 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படுவதால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் உயிர்ப்புடன் இருப்பதோடு, மைதானங்களின் வரலாறும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும்.
ஆனால் பிசிசிஐ நிர்வாகம் அப்படியே ரவுண்ட் ராபின் முறையில் மைதானங்களை தேர்வு செய்து வருகிறது. இனி நடக்கப்போகும் ஹோம் சீசனில் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி விளையாட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மைதானங்கள் தான் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கு கொஞ்சம் கூட பொறுத்தமில்லாத ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தரம்சாலா உள்ளிட்ட மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து மைதானங்களிலும் கடைசியாக எப்போது டெஸ்ட் போட்டிகள் நடந்தது என்றே ரசிகர்களுக்கு தெரியவில்லை.
ஏற்கனவே இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சிறிய மைதானங்களில் முக்கியமான தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் வருவார்களா என்ற கேள்வி எழுவதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் மேலும் குறையும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் பேஸ் பால் போன்ற புதிய திட்டத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணிக்கு, அதிகமாக சுழலும் மைதானத்தில் களமிறக்குவது பிசிசிஐ-யின் தந்திரமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் உலகக்கோப்பைத் தொடர் காரணமாக ஹோம் சீசனில் சென்னை, மும்பை, கொல்கத்தா மைதானங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கர்ளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீங்கள் மேட்ச் நடத்தும் லட்சணம் இது தானா, இப்படி செய்தால் எப்படி என ரசிகர்கள் விமர்சிக்க துவங்கி உள்ளனர்.