இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலா நான்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில் முதலிரண்டு டி20 போட்டிகளில் உலக சாம்பியன் இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று பிர்மிங்ஹாமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரரான ஃபின் ஆலன் மற்றும் நடுகள வீரர் க்ளென் ஃபிலிப்ஸ் இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
இந்த ஜோடி போட்டிப்போட்டு கொண்டு சிக்சர் மழை பொழிந்தது. 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 88 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஃபின் ஆலன் 53 பந்துகளில் 83 ரன்கள் அடித்த நிலையில் லுக் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து அதிரடி காட்டிய ஃபிலிப்ஸ் 69 ரன்கள் எடுத்த நிலையில், கஸ் அடிக்சன் பந்தில் போல்ட்டானார்.
34 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர், தலா 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசினார். இதானால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், ஃபிலிப்ஸ் மட்டுமே சிக்சர்களை விளாசினர். இங்கிலாந்து அணியில் கஸ் அட்டிக்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து 203 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பேர்ட்ஸ்டோ, டேவிட் மலான், வில் ஜாக்ஸ், ஹாரி ப்ரூக் என அடுத்தடுத்து வெளியேற, கேப்டன் பட்லர், மொயின் அலி ஓரளவுக்கு தாக்குபிடித்து அதிரடியாக ஆடினர்.
எனினும் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகமாக இருந்ததால் 40 ரன்கள் எடுத்த பட்லர், சான்ட்னர் பந்துவீச்சில் அவரிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த அதிரடி ஹிட்டர் லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், லுக் வுட் போன்றோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். பார்ட்னர்ஷிப் இல்லாமல் தனியாக ஆடி வந்த மொயின் அலி 26 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ஜோஸ் பட்லர் மற்றும் மொயீன் அலியை தவிர வேறு யாருமே 12 ரன்களை கூட கிடைக்கவில்லை.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, தொடரை 1-2 என்ற கணக்கில் உயிர்ப்புடன் வைத்துள்ளது. நியூசிலாந்து அணியில் கெயில் ஜேமீசன், இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சான்ட்னர் மற்றும் மேட் ஹென்ரி தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.