பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணியை அனுப்புவதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், தங்கள் அணியும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா வராது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கோபமாக பேசி இருந்தது. இதுவரை ஆசியக் கோப்பை தொடர் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான அணி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வந்தால் மட்டுமே இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்கு வருகை தரும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) சமீபத்தில் “இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் ஆசியக் கோப்பையை நடத்துவது என்ற பிசிசிஐ யின் முடிவை நிராகரித்தது.
இதுபற்றி இப்போது பேசியுள்ள நிஜாம் சேத்தி ”தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தானில் நான்கு போட்டிகளை விளையாடுவோம், மீதமுள்ள ஆட்டங்களை பொதுவான இடத்தில் விளையாடுவோம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இரண்டு முடிவுகளை எடுக்கலாம். எனது முன்மொழிவின்படி அவர்கள் அட்டவணையை வெளியிடலாம்’ அல்லது ‘இல்லை, நாங்கள் அனைத்து போட்டிகளையும் நடுநிலை இடத்தில் விளையாட விரும்புகிறோம்’ என்று கூறலாம்.
அவர்கள் முதல் முடிவை எடுத்தால் பிரச்சனை இல்லாமல் எல்லாம் சரியாகிவிடும். அவர்கள் இரண்டாவது முடிவை எடுத்தால், நாங்கள் ஆசிய கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்பதைத் தவிர வேறு வழியில்லை. அதுதான் தற்போதைய நிலை. திரு ஜெய் ஷா (பிசிசிஐ செயலாளர்) மற்றும் பிற சக ஊழியர்களின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரசியல் சூழல் காரணமாக இரு நாட்டு தொடர்களில் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடுவதில்லை. ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் மட்டுமே விளையாடுகின்றன. இதனால் இரு அணிகளும் மோதும் போட்டியைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.