50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அக்.14ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஆசியக் கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகள், சூப்பர் 4 போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றில் இந்திய அணி விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 45 நாட்களுக்குள் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 4 முறை மோதவுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியாவுக்கும் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கு இந்திய அரசின் கொள்கையே காரணமாக அமைந்துள்ளது. ஆனால் ஐசிசி தொடர்களுக்கு மட்டும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜெர்சியில் முக்கிய மாற்றம் நடக்கவுள்ளது. அதாவது ஆசியக் கோப்பைத் தொடரை பாகிஸ்தான் நடத்துவதால், முதல்முறையாக இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற உள்ளது. இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு இந்தியா நடத்திய டி20 உலகக்கோப்பையின் போது இந்தியாவின் பெயரை பாகிஸ்தான் அணியின் ஜெர்சியில் இடம்பெற்றது.
தற்போது முதல்முறையாக பாகிஸ்தான் நடத்தவுள்ள ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளதால், இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறவுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் அடுத்த ஒரு மாதத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கவுள்ளது.
இதனால் மீண்டும் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியில் இந்தியா பெயர் இடம்பெறவுள்ளது. இரு நாடுகளும் அரசியல் காரணங்களுக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள நிலையில், இரு நாட்டு ஜெர்சிகளிலும் மற்ற நாட்டின் பெயர் இடம்பெறவுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.