டி 20 உலக கோப்பைத் தொடரில் நிறைய போட்டிகளின் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மேலும் இந்த டி20 உலக கோப்பையில் இடம் பெற்றுள்ள 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்திலுமே சிறிய அணிகள் தான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
இதனால் பெரிய அணிகள் நிச்சயம் அவர்களை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் காணுவார்கள் என எதிர்பார்த்தால் அப்படியே நேர்மாறான முடிவுகள் தான் அமைந்து வருகிறது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுக்க, நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது.
இதே போல பங்களாதேஷ் அணியும் ஸ்ரீலங்காவை வீழ்த்த அமெரிக்க, கனடா, ஸ்கட்லாந்து உள்ளிட்ட பல்வேறு சிறிய அணிகள் நிறைய வெற்றிகளையும் இந்த தொடரில் குவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்காவில் உள்ள பிட்ச்களும் பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்து வரும் சூழலில் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பெரிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் காணுவதே கடினமான வாய்ப்பாக மாறிவிட்டது.
இதில் இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான் அணி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. அவர்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் அயர்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு எதிராக மீதம் இருக்கும் நிலையில் இவற்றில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று நெருக்கடியும் அவர்களுக்கு உருவாகியுள்ளது.
அப்படி நடந்தால் மட்டும் அவர்களால் எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட முடியாது. தற்போது நான்கு புள்ளிகளுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளது. மேலும் இந்திய அணி அமெரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆட உள்ளது. அத்துடன் இந்த இரண்டிலும் இந்திய அணி சிறந்த ஸ்கோருடன் நல்ல ரன் ரேட் பெற்று வெற்றி பெற வேண்டும்.
அது மட்டுமில்லாமல் அமெரிக்க அணி மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்திக்க வேண்டும். அப்படி மேற்கூறிய இரண்டும் நடந்து, பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டுடன் வென்றால் மட்டும் தான் அவர்களுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு உள்ளது.
அப்படி நடைபெறும் பட்சத்தில் லீக் சுற்று முடிவில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே புள்ளியுடன் இருக்கும். இந்த நிலையில், பாகிஸ்தான் அணி நல்ல ரன் ரேட் பெற்று விளங்கினால் நிச்சயம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விடலாம். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி, இப்படி அமெரிக்கா, அயர்லாந்து என சிறிய அணிகளின் முடிவுகளுக்காக காத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.