அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறும் நிலையும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு உருவாகியிருந்தது. கனடாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தங்களின் கடைசி போட்டியில் அயர்லாந்து அணியை சந்தித்திருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
32 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை அவர்கள் இழந்ததால் 60 முதல் 70 ரன்களில் ஆல் அவுட் ஆகி விடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஆர்டரில் வந்த டெலானி மிகச் சிறப்பாக ஆடி 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்க்க, கடைசி கட்டத்தில் பத்தாவது வீரராக இருந்த ஜோஸ்வா லிட்டிலும் தனது பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதனால் நூறு ரன்களைக் கடந்திருந்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர் இரண்டு விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுப் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.
110 ரன்களுக்கும் இலக்கு குறைவாக இருந்ததால் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்த்தால் அப்படியே எதிர்மறையான ஒரு விஷயம் தான் அங்கே அரங்கேறி இருந்தது. 11 ஓவர்கள் முடிவதற்குள் 62 ரன்களை மட்டுமே சேர்த்த பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்திருந்தது.
மூன்றாவது வீரராக வந்த பாபர் அசாம் தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டிக் கொண்டிருக்க பாகிஸ்தான் அணி தோற்றுவிடுமோ என்ற பதற்றமும் உருவானது. ஆனால் ஏழாவது விக்கெட்டுக்கு பாபர் அசாமுடன் கைகோர்த்த அப்பாஸ் அப்ரிடி, நிலைமைக்கு ஏற்ப ரன்கள் சேர்த்து அவர்கள் வெற்றி பெறவும் வழி வகுத்திருந்தார்.
18 வது ஓவரில் அப்பாஸ் அப்ரிடி அவுட்டாக, கைவசம் 3 விக்கெட்டுகள் இருக்கும் போது 14 பந்துகளில் 12 ரன்கள் வேண்டுமென்று நிலை உருவாகி இருந்தது. பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இணைந்து 19 வது ஓவரில் 7 பந்துகள் மீதம் வைத்து போட்டியை முடித்து வைத்தனர். விக்கெட்டுகளை இழந்தும் பாபர் அசாம் உள்ளிட்டோரின் ஆட்டத்தால் வெற்றி பெற்ற பாகிஸ்தான், சூப்பர் 8 சுற்றிற்கு இதே ஃபார்மில் வந்திருந்தால் இன்னும் மோசமாக அமைந்திருக்கும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.