2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அசத்தியுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி அபாயகரன அணியாக மாறியுள்ளது.
நட்சத்திர அணிகள் மோதிக் கொண்ட போதும் எதிர்பார்த்த அளவிற்கு உலகக்கோப்பை தொடருக்கு ஹைப் அதிகரிக்கவில்லை. இதுவே இந்திய அணி முதல் போட்டியில் விளையாடியிருந்தால் வேறு மாதிரி ஹைப் எகிறியிருக்கும். இது ஒரு பக்கம் இருக்க இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்கான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதில்லை. இம்முறை இந்திய மண்ணில் உலகக்கோப்பை போட்டி நடப்பதால், வரலாற்றை மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் கூட பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. இதனால் இந்திய அணி ரசிகர்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்று சாதனையை தக்க வைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கில் அதர்டன் பேசும் போது, இம்முறை உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று நினைக்கிறேன்.
இத்தனை ஆண்டு கால உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 7 போட்டிகளில் பாகிஸ்தான் ஒருமுறை கூட இந்தியா அணி வீழ்த்தியதில்லை. என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரின் மிகமுக்கியமான போட்டி என்றால் இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதினால், அந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கும்.
ஆனால் இம்முறை பாகிஸ்தான் அணி நிச்சயம் இந்திய அணி மறக்க முடியாத ஆச்சரியத்தை கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.