கடந்த சில ஐபிஎல் சீசன்களாக இருந்த போதிலும் போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவே கடுமையான தடுமாற்றத்தை கண்டிருந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த முறை நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அந்த அணியின் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. மேலும் 20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரது தலைமையில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில், கடைசி பந்தில் தோல்வி அடைய நேரிட்டது. தொடர்ந்து 2 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்ததுடன் ஐபிஎல் தொடரில் அதிகபட்சக ஸ்கோரையும் (277 ரன்கள்) அடித்திருந்தது ஹைதராபாத். இதற்கடுத்து 3 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைய, அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய ஹைதராபாத் அணி, மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தது. அதிரடி பேட்டிங் வரிசையை கொண்ட சிஎஸ்கே அணியையும் அசத்தலாக கட்டுப்படுத்தியது. பிட்ச்சை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப ஹைதராபாத் அணி பந்து வீசியதால், துபேவை தவிர எந்த சிஎஸ்கே வீரர்களாலும் ரன் சேர்க்க முடியவில்லை.
கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி 38 ரன்கள் மட்டும் எடுக்க, டேரில் மிட்செல் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. இந்த பந்து வீச்சிற்காக பேட் கம்மின்ஸ் கேப்டன்சி திறனும் அதிக பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, 5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் மட்டும் இழந்து 64 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால், திடீரென பிட்ச் ஸ்லோவாக சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட தொடங்கினர். ஆனாலும் அடிக்க வேண்டிய ரன் குறைவு என்பதால், 19 வது ஓவரில் இலக்கை எட்டிய ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டதுடன் நல்ல ரன் ரேட்டையும் பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு பின்னர் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், “இது வித்தியாசமான மண் என்பதால் போட்டி செல்ல செல்ல பந்தும் ஸ்லோவாக தொடங்கியது. இருந்தும் இது ஒரு அற்புதமான போட்டி தான். எங்கள் அணியில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஸ்பின்னர்களை எதிர்த்து ஷிவம் துபே ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், கட்டர் பந்துகளை வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு அவரை அவுட் எடுக்க பார்த்தோம்.
அபிஷேக் ஷர்மாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு நான் பந்து வீசக் கூடாது என்று விரும்புகிறேன். மைதானத்தில் கூடி இருந்த ரசிகர்களும் உற்சாகமாக இருந்தனர், அதிலும் குறிப்பாக தோனி பேட்டிங் செய்ய வந்த போது அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சொந்த மைதானத்தில் ஆடுவதும் சிறப்பாக இருந்தது” எனக்கூறி உள்ளார்.