இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எந்த ஒரு இடத்திலும் எழுச்சி பெற விடவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்த ஆஸ்திரேலியா அணி 234 ரன்களில் இந்திய அணியை சுருட்டி 209 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட துவங்கியதும் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக தொடங்கினர். அந்த நேரத்தில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த சுப்மன் கில்லின் விக்கெட் தான் தற்போது அதிகளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
ஏனெனில் ஸ்காட் போலந்து வீசிய பந்தை அடிக்க நினைத்த சுப்மன் கில் மூன்றாவது ஸ்லிப்பிலிருந்த கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்த கேட்சை கேமரூன் கிரீன் அட்டகாசமாக பிடித்திருந்தாலும் பந்து தரையில் பட்டதா? என்று சந்தேகம் இருந்தது. இதன் காரணமாக இந்த முடிவு மூன்றாவது அம்பயரிடம் சென்றது. மூன்றாவது அம்பயரும் பலமுறை ரீப்ளே செய்து பார்த்துவிட்டு கில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அப்படி சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்ட இந்த விக்கெட் தவறானது என ரசிகர்களும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே இந்த விடயம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா : ஐபிஎல் தொடரில் கூட 10 கேமராக்கள் மூலம் 10 கோணங்கள் காண்பிக்கப்படுகிறது, ஆனால் இந்த ஐசிசி இறுதிப் போட்டியில் இரண்டே கோணங்களில் மட்டும் பார்த்து அவர் அவுட் என்று அறிவிக்கப்பட்டது தவறு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : கேமரூன் கிரீன் பிடித்தது சரியான கேட்ச் தான் என்று நான் கருதுகிறேன். அந்த அளவிற்கு அவர் அற்புதமாக பிடித்தார். இருப்பினும் இந்த விக்கெட் முடிவை நாங்கள் அம்பயர்களிடம் ஒப்படைத்து விட்டோம். அவர்களின் முடிவையே நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அந்த அம்பயரும் சாதாரண ஒருவர் கிடையாது.
இதையும் படிக்கலாமே: இந்திய அணியின் போட்டி கட்டணத்தில் கை வைத்த ஐசிசி. அதுலயும் சுப்மன் கில்லுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் ஐட்டமா இருக்கு.
உலகத்தரம் வாய்ந்த நடுவராக அவருக்கு கிரிக்கெட் விதிமுறைகள் என்ன கூறுகிறது என்பது நன்றாகவே தெரியும். அவர் எல்லா கோணங்களிலும் சரி பார்த்து விட்டு தான் இந்த முடிவை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறன். 100 மீட்டருக்கு வெளியில் இருக்கும் ரசிகர்களை விட பெரிய திரையில் மீண்டும் மீண்டும் சரிபார்க்கும் அம்பயருக்கு இந்த முடிவு சரியாக தெரியும் என ரோகித் சர்மாவின் கருத்திற்கு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது