சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் எதிர்பாராத பல வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தனர். அதிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் 20 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஏலம் போய் ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரத்தையும் படைத்தனர். இவர்களை போல சில இளம் வீரர்கள் கூட அதிக அளவில் ஐபிஎல் அணிகளின் கவனம் பெற்று இந்த முறை பல கோடி ரூபாய்க்கும் விலை போயிருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் சர்வதேச அளவில் ஜொலித்த பல வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் விலை போகவில்லை என்பது பலரையும் வருத்தப்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், ஆதில் ரஷீத், பிலிப் சால்ட் உள்ளிட்டோரை எடுக்க எந்த அணிகளும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கூட இது பற்றி கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னை எந்த அணிகளும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்காத அதே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை டி 20 போட்டியில் அடித்து அனைத்து அணிகளையும் புலம்ப வைத்துள்ளார் பிலிப் சால்ட். தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்திருந்தது.
இதன் பின்னர் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பிலிப் சால்ட் சதமடிக்க கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் அதிரடி காட்டி த்ரில் வெற்றி பெறவும் உதவி இருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது டி20 போட்டியிலும் பிலிப் சால்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 267 ரன்கள் அடித்திருந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பிலிப் சால்ட் 119 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் டி20 தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இங்கிலாந்து அணியின் ஸ்கோர் பதிவாகி இருந்தது. அதே போல, இங்கிலாந்து அணியில் ஒரு தனிநபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக பிலிப் சால்டின் 119 ரன்கள் உள்ளது. கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதிரடியாக அதே வேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே ரன் சேர்த்தது.
இதனால் 16வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 192 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் இங்கிலாந்தும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டி20 தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதமடித்துள்ள பிலிப் சால்டை தான் தற்போது ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் எடுக்க முன் வராமல் போனது. ஏலத்தில் தான் Unsold என அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே சதம் அடித்த பிலிப் சால்ட் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றிந்தால் இதுபோன்று பல இன்னிங்ஸ்களை கொடுத்திருப்பார் என்றும் ரசிகர்கள் உருக்கத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.