சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் என இரண்டிலும் தலைச்சிறந்த கேப்டனாக விளங்கி வந்தவர் தான் ரோஹித் ஷர்மா. கடந்த ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மா, தற்போது சர்வதேச போட்டியில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நடந்த மூன்று ஐசிசி தொடரின் இறுதி போட்டியிலும் இந்திய அணி பங்கு வகிக்க முக்கிய காரணமாக ஒரு தலைவராகவும் செயல்பட்டிருந்த ரோஹித் ஷர்மா, பேட்டிங்கிலும் எந்த குறையும் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் இந்த ஆண்டு டி20 உலக கோப்பையையும் அவரது தலைமையில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐசிசி தொடருக்காகவும் தயாராகி வருகிறது. இதற்கு மத்தியில் ரோஹித் ஷ்ர்மாவின் தலைமை பண்பு பற்றி பல வீரர்கள் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவருடன் இணைந்து ஆடிய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் ஷ்ர்மா, அதே சீசனில் பிளே ஆப் வரை வழிநடத்தி இருந்தார். அந்த சீசனின் லீக் தொடரில் நடந்த சம்பவத்தை பற்றி பேசி உள்ள பியூஷ் சாவ்லா, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
“நான் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து நிறைய கிரிக்கெட் ஆடி உள்ளேன். இதனால், எங்களுக்கு இடையேயான புரிதல் நன்றாக இருந்தது. நாங்கள் போட்டிக்கு வெளியேயும் நிறைய நேரம் உரையாடுவோம். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நடுவே ஒரு போட்டிக்கு முன்பாக இரவு் 2:30 மணிக்கு எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
நான் விழுத்திருக்கிறேனா என கேட்டு தெரிந்து கொண்டு மைதானத்தை பேப்பரில் வரைந்து கொண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் வார்னரை எப்படி அவுட் ஆக்கலாம் என்பது பற்றி என்னிடம் விவாதித்து கொண்டிருந்தார். அந்த நேரத்திலும் கூட எப்படி என்னிடம் இருந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கி கொண்டிருந்தார்.
இங்கே கேப்டன்களும் உள்ளனர், தலைவர்களும் உள்ளனர். ரோஹித் ஒரு கேப்டன் கிடையாது. அவர் ஒரு தலைவர். 2023 ஒரு நாள் உலக கோப்பையாக இருந்தாலும், 2024 டி20 உலக கோப்பையாக இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஆடிய விதம், அடுத்து பேட்டிங் செய்ய வந்த வீரர்களுக்கு எளிதாகவும் அமைந்திருந்தது. அவர் தான் நிஜத்தில் சிறந்த தலைவர். அவர் உங்களுக்கான வாய்ப்புகளை வழங்க கூடிய வீரர்” என பியூஷ் சாவ்லா புகழாரம் சூட்டி உள்ளார்.