இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவியாக இருந்தார். அதேபோல் ஷர்துல் தாக்கூர் 10 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக முகமது ஷமி vs ஷர்துல் தாக்கூர் இடையிலான விவாதம் தொடங்கியுள்ளது.
இந்திய அணியின் 3வது வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமியே இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான பியூஷ் சாவ்லா பேசும் போது, ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கை பார்க்கும் போது, அவர் அதிரடி ஆட்டக்காரர் இல்லை என்பது தெரியும். கடைசி நேரத்தில் வந்து 20 பந்துகளில் 30 ரன்களோ, 40 ரன்களோ அவரால் விளாச முடியாது.
அவருக்கு 20 பந்துகளில் 25 ரன்களே அடிக்க முடியும். அதேபோல் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சை பற்றி பார்த்தோம் என்றால், நிச்சயம் விக்கெட் டேக்கராக இருந்துள்ளார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் எகனாமி ரேட் தான் அதிகமாக உள்ளது. ஷர்துல் தாக்கூர் பந்துவீச போவது இந்திய ஆடுகளங்களில் தான்.
இந்திய ஆடுகளங்களில் பெரும்பாலானவை பிளாட் பிட்ச்கள் தான். இதனால் 8வது வீரராக இருப்பவர் நல்ல பவுலராக இருக்க வேண்டும். ஆனால் முகமது ஷமியை பார்த்தோம் என்றால், எந்த பிட்ச்சாக இருந்தாலும் கடினமாக லெந்தை சரியாக பிடிப்பார். டெஸ்ட் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் என்று எந்த வகையாக இருந்தாலும், ஸீமை பிடித்து பந்துவீசுவதில் வல்லவர்.
பிளாட் பிட்ச்களில் ஷமியை போன்ற பந்துவீச்சாளர் தான் தேவையாக இருக்கிறார். இதனால் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக இந்திய அணி முகமது ஷமியுடன் களமிறங்குவதே நன்மையை பயக்கும் என்று கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது திறமையை நிரூபித்துவிட்டார்.
அதேபோல் ஷர்துல் தாக்கூர் 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளையும், 25 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 329 ரன்களையும் விளாசி இருக்கிறார். இதனால் இருவரில் யாரை ரோகித் சர்மா உலகக்கோப்பை தொடரில் கொண்டு வருவார் என்பது குழப்பமாக அமைந்துள்ளது.