இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதற்கு அப்படியே மாற்றாக தொட்டதெல்லாம் பிரச்சனையில் முடிகிறது. உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை பிரித்வி ஷாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலையில், என்ன செய்வதென தெரியாமல் பிரித்வி ஷா அமைதி காத்து வந்தார்.
இந்த நிலையில் தியோதர் டிராபி தொடரில் பிரித்வி ஷாவிற்கு பங்கேற்க வாய்ப்பு வந்த நிலையில், அதற்கு பதிலாக இங்கிலாந்தில் நடக்கும் ஒருநாள் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்தார். இங்கிலாந்தின் நார்த்தம்ப்டன்ஷையர் அணிக்காக பிரித்வி ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
உள்ளூரிலேயே எதையும் செய்ய முடியாத பிரித்வி ஷா, இங்கிலாந்து மண்ணில் என்ன செய்வார் என்று ரசிகர்களிடையெ கேள்வி எழுந்தது. அதற்கேற்ப நார்த்தம்டன்ஷையர் அணிக்காக அறிமுகமான முதல் போட்டியில் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த போது யாரும் எதிர்பாராத வகையில் புல் ஷாட் அடிக்க முயன்று ஹிட் விக்கெட்டாகி ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து சென்று பிரித்வி ஷாவை பிடித்த கெட்ட நேரம் விடவில்லை என்று பார்க்கப்பட்டது. பிரித்வி ஷா ஆட்டமிழந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகியது. இந்த நிலையில் சோமர்செட் அணியை எதிர்த்து இன்றைய ஆட்டத்தில் நார்த்தம்டன்ஷையர் அணி களமிறங்கியது.
அதில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா களமிறங்கி கடைசி வரை பிரித்வி ஷா விளையாடினார். சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா சதம் மட்டுமல்லாமல் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். மொத்தமாக 153 பந்துகளில் 11 சிக்சர்கள், 28 பவுண்டரிகள் உட்பட 244 ரன்களை குவித்தார். இதில் அவர் அடித்த பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை மட்டும் கணக்கிட்டால் 39 பந்தில் 178 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பிரித்வி ஷா விளாசி சாதனை படைத்துள்ளார்.
✅ Sixth-highest score in List A history
✅ Second-highest List A score in 🏴
✅ Highest-ever List A score for @NorthantsCCC @PrithviShaw with one of the all-time great knocks 👑#MBODC23 pic.twitter.com/NfXH7RHfqk— Metro Bank One Day Cup (@onedaycup) August 9, 2023
இதன் மூலம் பிரித்வி ஷா தனது கம்பேக்கை உலகுக்கு அறிவித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இதனால் விரைவில் இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, பிரித்வி ஷா இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.