சச்சின், லாரா, சேவாக் ஆகியோரை சேர்த்து வைத்து உருவாக்கியதை போல் இருக்கிறார் பிரித்வி ஷா என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி இருந்தார். அதற்கேற்ப இந்திய அணியில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே மிரட்டலான சதம் விளாசி அசத்தினார். ஆனால் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய பிரித்வி ஷா, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.
அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் பேட்டிங் ஃபார்ம் மோசமானது, உள்ளூர் கிரிக்கெட்டில் ஃபார்மை இழந்தது என்று பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தியோதர் டிராபி தொடரில் பங்கேற்காமல் இங்கிலாந்துக்கு விமானம் ஏறினார் பிரித்வி ஷா. நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன்பின்னர் முதல் போட்டியில் மோசமாக விளையாடி பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயன்று ஹிட் விக்கெட்டானார். இதனால் பிரித்வி ஷா மீண்டும் கிண்டல் செய்யப்பட்ட நிலையில், சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி மிரட்டலான பல்வேறு சாதனைகளை படைத்தார். இதனால் பிரித்வி ஷா கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இரட்டை சதம் விளாசிய பின்னர் பிரித்வி ஷா பேசும் போது, எனது பேட்டிங்கில் இருந்து இன்னும் சில ரன்கள் வரும் என்று நினைக்கிறேன். எனது பேட் ஸ்விங் நன்றாக உள்ளதாக நினைக்கிறேன் என்று கூறினார். அவர் சொல்லியதை போல் மீண்டும் அசத்தலான சதம் ஒன்றை விளாசி இருக்கிறார் பிரித்வி ஷா.
நார்த்தம்டன்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய துர்ஹம் அணி 198 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் பின்னர் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக பிரித்வி ஷா தொடக்கம் கொடுத்தார். முதல் ஓவர் முதலே அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, சிக்சர் பவுண்டரி என்று வெளுத்து கட்டினார்.
பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டத்தால் நார்த்தம்டன்ஷியர் அணி 25.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய பிரித்வி ஷா, 76 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் என்று 125 ரன்களை விளாசினார். அடுத்தடுத்து இரட்டை சதம், சதம் என்று பிரித்வி ஷா விளாசி வருவது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.