சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன. இளம் வீரர்களான ருத்துராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியொருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க, மூத்த வீரரான சேதேஷ்வர் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புஜாரா நீக்கப்பட்டதற்கு காரணம் ராகுல் டிராவிட் அணிக்குள் புது இளம் ரத்தத்தை பாய்ச்ச விரும்பியதுதான் என சொல்லப்படுகிறது.
புஜாரா கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது அவர் மேல் விமர்சனங்கள் கூடிக்கொண்டே செல்ல வழிவகுத்தது. கடந்த ஆண்டு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் கவுண்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணியில் இணைந்தார்.
ஆனாலும் முன்பு போல அவருடைய பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய அவர் 14 மற்றும் 27 என சொற்ப ரன்களில் இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்தார். அதே போல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரிசர்வ் வீரராக இருந்த சூரியகுமார் யாதவ்வும் சமீபத்தில் வெளியான டெஸ்ட் அணியில் இல்லை.
இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரும் துலிப் கோப்பைக்கான அணியில் வெஸ்ட் சோனில் இணைந்துள்ளனர். ஜூன்28 ஆம் தேதி துலிப் கோப்பை காலிறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் விளையாடி புஜாரா தன்னை நிரூபிக்கும் பட்சத்தில் மீண்டும் அவருக்கான கதவுகள் இந்திய அணியில் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
டிராவிட்டுக்கு பிறகு இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட புஜாரா இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வருகிறார். தற்போது 35 வயதாகும் புஜாரா வயது காரணமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடுவார் என்பது கேள்விக்குறிதான். அதனால் இனிமேல் இந்திய அணியில் அவரை பார்க்கமுடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சமீபத்தில் இதுபோல அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே மீண்டும் அணியில் இணைந்து இப்போது தன்னுடைய துணை கேப்டன் பொறுப்பையும் திரும்ப பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 7195 ரன்களை சேர்த்துள்ளார். அதில் 19 சதங்களும் 35 அரைசதங்களும் அடக்கம். 43 ரன்கள் என்ற சராசரியில் ஆடியுள்ள புஜாரா ஒரு இரட்டைசதமும் அடித்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 206 ரன்களாகும்.