இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் அட்டவணை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத போதிலும் அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், வழக்கம் போல ஒவ்வொரு சீசனிலும் புதிதாக இடம்பெறும் இளம் வீரர்கள் போல இந்த முறையும் இடப்பிடித்துள்ள பலர் மீது எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.
அதிலும், ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பைத் தொடருக்கு பின் எதிர்பாராத சில அசத்தலான வீரர்களை தேர்வு செய்திருந்தது. நியூசிலாந்து அணி வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்டோருடன் சமீர் ரிஸ்வி என்ற இந்திய இளம் வீரரை சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் சிஎஸ்கே எடுத்திருந்ததும் அவர் மீதான ஆவலை அதிகப்படுத்தி உள்ளது.
இதனிடையே, சிஎஸ்கே அணிக்காக தேர்வாகி உள்ள வீரர்களின் ஆட்டத்தையும் அந்த அணியின் ரசிகர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அந்த வகையில், டேரில் மிட்செல் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார். அதே போல, சிஎஸ்கேவில் இடம்பிடித்த மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில், தனது முதல் டெஸ்ட் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி சாதனை புரிந்திருந்தார்.
கூடவே இரண்டு விக்கெட்டுகளையும் ரச்சின் ரவீந்திரா எடுத்திருந்த நிலையில், அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. இவரை போலவே, நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கேன் வில்லியம்சன் காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து தொடர்ந்து நம்பர் 1 வீரராகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற பின் 24 வயதே ஆகும் ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சனுடன் அந்த விருதை பகிர்ந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு முடியாது என பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், “கண்டிப்பாக அவருடன் நான் பகிர்ந்து கொள்ளமாட்டேன். அவர் 31 டெஸ்ட் சதங்களை பெற்றுள்ள போது, நான் ஒரே ஒரு சதத்தை மட்டும் தான் பெற்றுள்ளேன். இதனால், அவருடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
எப்போதுமே அணியின் வெற்றிக்கு நமது பங்களிப்பை கொடுப்பது ஸ்பெஷலான உணர்வாகவே உள்ளது. தொடர்ந்து உங்களின் சிறப்பான பங்களிப்பை அணிக்காக அளிக்கும் போது, அதற்கு உரியவரான நீங்கள் உங்களின் பயிற்சியாளர்களால் சிறப்பாக தயார் செய்யப்படுகிறீர்கள்” என ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.