2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டனர். உலகக்கோப்பை தொடரை வென்ற பின் சச்சின் டெண்டுல்கர் பேசும் போது, பெங்களூரு நடந்த பயிற்சி முகாம் எங்களுக்கு மிகச்சிறந்த உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதே திட்டத்தை கையில் எடுத்துள்ளார். உலகக்கோப்பைத் தொடருக்கு முன் 15 நாட்கள் வரை நேரமில்லாததால், ஆசியக்கோப்பைக்கு முன்பாக பயிற்சி முகாமை நடத்த பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சி முகாமிற்கு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட ஜூனியர் வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன் வரை அனைவரும் வந்து சேர வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், பும்ரா உட்பட அனைவரையும் வர வைப்பதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.
ஏனென்றால் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ஆசியக்கோப்பை வருவதால், அந்தத் தொடரிலேயே இந்திய அணியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகளில் இந்திய அணி விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்திய துணைக்கண்டத்தில் ஆடும் அணிகளே இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைத் தொடரில் அதிக பாதிப்பை கொடுப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி பலத்தை நிரூபிக்க இந்திய அணி தயாராகி வருகிறது. அதன் காரணமாகவே அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற பின் இந்திய வீரர்கள் அனைவரும் நேரடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லவே வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.