சமீப காலமாக பல இளம் வீரர்கள் இந்திய அணியில் நுழைந்துள்ளனர். அதே சமயம் சீனியர் வீரர்களுக்கும் அவ்வப்போது ஓய்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட கோலி, ரோகித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்கள் களம் இறங்கினார். இதற்க்கு முக்கிய கரணம் வீரர்களின் தரத்தை பெரிசோதிப்பதே என்று கூறப்பட்டது.
குறிப்பாக இந்திய அணியின் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவர்கள் இடத்தை நிரப்புவதற்காக இது போன்ற பரிசோதனைகள் சர்வதேச போட்டியில் நடத்தப்படுகிறது என்று கருதப்படுகிறது. அந்த பரிசோதனையின் மூலம் இளம் வீரர்களின் முழுமையான திறனை கிரிக்கெட் ஆர்வலர்களும் நேரலையிலேயே பார்க்க முடிகிறது.
அதே சமயம் பரிசோதனை என்ற பெயரில் டிராவிட் இந்திய அணியை சீரழிக்கிறார் என்ற ஒரு புகாரும் ரசிகர்கள் மத்தியில் அவர் பேரில் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்க இலங்கை செல்வதற்கு முன் ராகுல் திராவிட் அளித்த பேட்டியில், பரிசோதனை குறித்தும் பேசி உள்ளார். அவர் கூறுகையில், நேர்மையாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்றால் இந்த பரிசோதனை என்ற வார்த்தை நிறைய முறை பெரிதும் யோசிக்காமல் வீசப்படுகிறது.
நாங்கள் வெறுமனே பரிசோதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அனைத்தையும் செய்வதில்லை. இது போன்ற செயல்களுக்கு பின்பு சில காரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஒரு உதாரணம் கூறுகின்றேன். நம்பர் 4, 5வது இடம் குறித்து தொடர்ந்து நாம் பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் வருகிறோம். இதன் காரணமாக அந்த இடம் குறித்த ஒரு சரியான முடிவு அணியிடம் இல்லை என்ற ஒரு பிம்பம் உருவாகி உள்ளது.
நான் 18, 19 மாதங்களுக்கு முன்பே நம்பர் 4, 5வது இடத்தில் எந்த மூன்று வீரர்கள் விளையாட போகிறார்கள் என்று கூறிவிட்டேன். ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் தானே அந்த இடத்திற்கு சரியாக இருப்பார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் மூவரும் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.
அதனால் அந்த இடத்தில் மற்ற வீரர்களை விளையாட வைத்து பரிசோதிப்பது அவசியமாகிறது. ஒருவேளை உலககோப்பை வரை அவர்கள் பிட் ஆகாமல் இருந்தால் நமக்கு மாற்று வீரர் தேவை படும் அல்லவா. அதனால் இதை எல்லாம் செய்வது கட்டாயம் ஆகிறது என்றார் ராகுல் டிராவிட்.