சினிமா துறையில் ஒருவர் முன்னணி நடிகராகவோ அல்லது வேறு துறையில் சாதிக்கும் போது அவரது மகனோ மகளோ அவர்களின் தந்தையை போன்று வரவேண்டும் என்று நினைத்தால் பெரிய கடினங்கள் எதுவும் இருக்காது. அவர் இயக்குனராக, நடிகராக சாதிப்பதற்கான முதல் வாய்ப்பு கொஞ்சம் கடினமாக உழைத்தால் கிடைத்துவிடும் என்று சூழலில் கிரிக்கெட் போட்டிகளில் அப்படியான ஒரு சூழல் கிடையாது.
எப்படிப்பட்ட நம்பர் ஒன் கிரிக்கெட் வீரரின் மகனாக இருந்தாலும் இங்கே அவர்களுக்கு தந்தையை போல ஜொலிப்பது என்பது மிக மிக கடினமான விஷயம். திறமையை பொறுத்து தான் அவரகளின் வாய்ப்பும் இங்கே கிடைக்கும். ஒரு காலத்தில் சுனில் கவாஸ்கர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்து இந்திய அணியை தாங்கிப் பிடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது மகன் ரோஹன் கவாஸ்கரால் கிரிக்கெட் அரங்கில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.
இதே போல கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகனான அனிருத்தாவும் கிரிக்கெட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தற்போது விமர்சகராகவும் இருந்து வருகிறார். இவர்களை விட சிறந்த உதாரணமாக சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சாளராக இருந்தும் அவருக்கான வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் சினிமா துறையை போல கிரிக்கெட்டில் வாரிசுகள் ஜெயிப்பது என்பது மிக மிக கடினமான விஷயமாக இருந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் ஒரே ஒரு சிக்ஸரால் ராகுல் டிராவிட்டின் மகன் சமீபத்தில் அடித்த சிக்ஸர் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் டிராவிட் இந்திய அணியின் சுவர் என்றும் வர்ணிக்கப்பட்டு வருபவர். அதிரடி ஆட்டத்தை பெரிதாக தொட்டுக் கூட பார்க்காத டிராவிட் ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் சிக்ஸர்களை அதிகமாக அடித்துள்ளார். இன்னொரு பக்கம் டெஸ்ட் போட்டிகள் தொடங்கி ஒரு நாள் போட்டி உள்ளிட்டவற்றில் மிக பொறுமையாக ரன் சேர்த்து நிதானமான ஷாட்களை பவுண்டரிகளுக்கு விரட்டும் பழக்கமுடைய டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் சமீப காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி கவனத்தை பெற்று வருகிறார்.
அந்த வகையில் மகாராஜா டிராபி டி20 தொடரில் மைசூர் மற்றும் பெங்களூரு அணிகள் மோதி இருந்தது. மைசூர் அணியில் ஆடியிருந்த சமித் டிராவிட் ஏழு ரன்களில் அவுட்டானாலும் அதில் அவர் அடித்த சிக்ஸர் தொடர்பான வீடியோ தான் தற்போது அனைவரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது. தந்தைக்கு அப்படியே எதிர்மாறாக மிக மிரட்டலான ஒரு அதிரடியை அவரது ஒரே சிக்ஸரில் தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது.