ஐபிஎல் 16 சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. பாதி போட்டிகளுக்கு மேல் நடந்து முடிந்துள்ள நிலையில் எந்தந்த அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 44 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி பவுலர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணியிலும் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நிலைத்து நின்று ஆடினார். இதனால் எப்படியும் குஜராத் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால் ரன் ரேட் ஏறிக்கொண்டே சென்றது.
கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்ட போது 19 ஆவது ஓவரை நோர்ட்யா வீசினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பாண்ட்யாவால் 3 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. கடைசி மூன்று பந்துகளை திவாட்டியா எதிர்கொண்டார். அந்த மூன்று பந்துகளிலும் அனாயசமாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு மைதானத்தை ஆர்ப்பரிக்க வைத்தார் திவாட்டியா. நோர்ட்யா யார்க்கர் வீச முயன்று மூன்று பந்துகளும் மிஸ் ஆக, மூன்று பந்துகளையும் லெக் ஸைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு ஒரு கூஸ்பம்ப் தருணத்தை மைதானத்தில் உருவாக்கினார் திவாட்டியா.
இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரை வீசிய இஷாந்த் ஷர்மா தனது வேரியேஷனான பந்துகள் மூலமாக திவாட்டியாவின் விக்கெட்டை எடுத்தார். இதனால் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது இதன் மூலம் டெல்லி அணி தங்கள் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார்.
கடைசி இரண்டு நாட்களாக குறைந்த ஸ்கோர் போட்டிகள்தான் என்றாலும் கடைசி பந்துவரை சென்று ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.