பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசன்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இந்த சீசனில் முன்னேற்றம் கண்டிருந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மட்டும் வெளியேற, மற்ற 3 அணிகளும் கோப்பையை வெல்வதற்காக ஆயத்தமாகி வருகின்றனர். இதில் குவாலிஃபயர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
முன்னதாக குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று நேராக இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்படும் கொல்கத்தா, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் மட்டுமில்லாமல் அதிக ரன் ரேட்டையும் ஐபிஎல் வரலாற்றில் தக்க வைத்திருந்தது. அந்த அணியில் ஆடும் 11 வீரர்களும் ஆபத்தாக இருக்கும் சூழலில் கம்பீரின் ஆலோசனையும் அந்த அணிக்கு மிகப்பெரிய சாதகமாக மாறி உள்ளது.
இவர்களைப் போலவே ஏறக்குறைய அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து ஆடிவரும் அணிதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா பத்து ஓவர்களில் 150 ரன்கள் வரைக்கும் அடித்து வரும் சூழலில் பந்து வீச்சிலும் நடராஜன், புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
ஒரு சில போட்டிகளில் அந்த அணியின் பேட்டிங் நன்றாக அமையாத சூழலில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நிச்சியமாக எல்லாம் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகளை போலவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் துடிப்பான இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் என இரண்டும் சரியான கலவையில் உள்ளனர்.
இப்படி மூன்று அணிகளுமே ஒவ்வொரு விதத்தில் பலத்துடன் விளங்குவதால் இந்த முறை யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பதில் நிறைய ட்விஸ்ட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் சூழலில் தான் இந்த மூன்று அணிகளுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உள்ள ஒற்றுமை ஒன்றை பற்றி தற்போது பார்க்க போகிறோம்.
குவாலிபயர் 2 மற்றும் இறுதி போட்டி ஆகிய இரண்டுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறப்போகிறது. முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா என மூன்று அணிகளும் மோதி இருந்த போட்டியில் தோல்வியை அடைந்திருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் இந்த 3 அணிகளும் மோதி இருந்த நிலையில் சிஎஸ்கே இந்த மூன்றிலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணிகளுக்கு அதிர்ச்சியும் அளித்திருந்தது. இப்போது சிஎஸ்கே பிளே ஆப்பிற்கு முன்னேறாமல் போனதால் இந்த மூன்று அணிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அணிகள் நிச்சயம் சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.