ஐபிஎல் முடிந்த கையோடு அதிக நாட்கள் ஓய்வில்லாமல் இந்திய அணியினர் உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து கிளம்பினர். அதிலும் ஜடேஜா, கில், ரஹானே போன்ற வீரர்களுக்கு ஓய்வு என்பதே கொஞ்ச கூட இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நடந்து வரும் WTC பைனலில் இந்திய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து ரவி சாஸ்திரி ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு மாற்றம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி. பிரான்ச்சைஸ் கிரிக்கெட்டை விட இந்திய அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும், இதற்கு ஆதரவாக இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒரு விதியை அறிமுகப்படுத்துமாறும் கிரிக்கெட் வாரியத்தை சாஸ்திரி வலியுறுத்தினார்.
அவரது பேச்சில் “எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்… எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்? இந்திய அணிக்கா அல்லது ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டுக்கா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் என்று சொன்னால், WTC பைனலை மறந்துவிடுங்கள் . இது முக்கியமானது என்றால் பிசிசிஐ ஒரு முடிவை எடுக்க வேண்டும் .
இந்தியாவின் நலன் கருதி ஐபிஎல்லில் இருந்து ஒரு வீரர் வெளியேற வேண்டும் என்றால், அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று ஐபிஎல் ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்து இருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தோனியோட விக்கெட்டடை எடுக்க நான் இந்த யுக்தியை தான் கையாண்டேன். பைனல்ல ஜடேஜாவுக்கு இந்த மாதிரி பால் போட்டுருக்கலாம் – வருண் சக்கரவர்த்தி பேச்சு
முதலில் அதுபோல, ஷரத்தை வைத்து, அதன்பிறகு அணி உரிமையாளர்கள் எவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்யும்படி கேளுங்கள். அது மிகவும் முக்கியமானது. நீங்கள் விளையாட்டின் பாதுகாவலர். நாட்டில் கிரிக்கெட்டை நீங்கள்தான் கட்டுப்படுத்துகிறீர்கள்,” என்று அவர் கூறினார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்து கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.