இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலைய்டு மைதானத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. பிங்க் பந்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய ரசிகர்களை ஆரம்பத்தில் சற்று பதற்றம் அடைய வைத்திருந்தது. இதே மைதானத்தில் 36 ரன்களில் அவர்கள் ஆல் அவுட்டானதை நினைத்து ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பினாலும் இப்போதுள்ள ஃபார்மிற்கு இந்தியா தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ரோகித் மற்றும் கில் ஆகிய இருவர் இல்லாமல் பும்ரா தலைமையில் ஆஸ்திரேலியா அணியை சுக்கு நூறாக உடைத்திருந்தது இந்திய அணி. இரண்டாவது டெஸ்டில் அவர்கள் இருவரும் மீண்டும் திரும்புவது பேட்டிங்கில் இன்னும் வலு சேர்க்கும் என்பதால் பும்ராவின் தலைமையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவை ஒரு கை பார்த்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
இந்திய அணிக்கு சாதகமான ஒரு சில விஷயங்கள் இருக்கும் அதே நேரத்தில் பேட்டிங்கில் ஒரு சில குழப்பங்கள் உருவாகியுள்ளது. ரோகித் இல்லாததால் ராகுல் தொடக்க வீரராக முதல் டெஸ்டில் ஆடியிருந்தார். ஆனால் ரோகித் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளதால் அவரது பேட்டிங் பொசிஷன் மாற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். “ரோகித் சர்மா அற்புதமான ஒரு வீரர். அவரிடம் அனுபவமும், இளமையும் சரியாக கலந்திருப்பதால் தொடக்க வீரராக களமிறங்க வேண்டுமா அல்லது மிடில் ஆர்டரில் ஆட வேண்டுமா என்பதும் அவருடைய விருப்பம் தான்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இத்தனை நாட்கள் ரோகித் ஆடிய அனுபவத்தின் அடிப்படையில் எந்த இடத்தில் களமிறங்கினால் அது அவர்களுக்கு ஆபத்தாக இருக்கும் என்பதையும் அவர் தெரிந்திருப்பார். அந்த இடத்தை அறிந்து தான் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட பேட்டிங் செய்ய வேண்டும். ரோஹித் நல்ல அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
மேலும் கே எல் ராகுல் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கலாம். ஏனென்றால் ரோகித் சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் இணைந்து உடனடியாக பிரதமர் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் ஆடியிருந்தார். இதனால் தொடக்க வீரராக ஆடாமல் அவர் ஐந்து அல்லது ஆறாவது வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என ரவி சாஸ்தி கூறியுள்ளார்.