இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் வரிசையில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் தோனி. கபில்தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று தந்த பெருமை தோனியையே சேரும். 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் அவர் வசம் உள்ளது.
இதுதவிர அவர் தலைமையேற்ற சி எஸ்கே அணிக்காக 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையும் வென்று கொடுத்துள்ளார். அவரின் கேப்டன்சி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு, தற்போது விளையாடும் பல இளம் வீரர்களும் அவரை தங்களது முன்னோடியாகக் கூறும் அளவுக்கு அமைந்துள்ளது.
சர்வதேசக் கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்ட அவர் இப்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரிலும் அவர் ஓய்வு பெறுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போது வர்ணனை செய்து வருபவருமான ரவி சாஸ்திரி, தோனி 2007 ஆம் ஆண்டு எப்படி இந்திய அணிக்கு கேப்டன் ஆனார் என்ற ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.
இது சம்மந்தமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் “நான் அப்போது இந்திய அணிக்கு மேலாளராக இருந்தேன். அணித் தேர்வுக்குழு தலைவராக திலிப் வெங்சர்கார் இருந்தார். அவர் என்னிடம் தோனி பற்றி கேட்டார். நான் “எதிர்காலத்தில் கேப்டனாகும் திறமை அவரிடம் இருக்கிறது” எனக் கூறினேன்.
உலகக்கோப்பைக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் டிராவிட் கேப்டனாகவும், யுவ்ராஜ் சிங் துணை கேப்டனாகவும் இருந்தனர். கேப்டனுக்கான போட்டியில் யுவ்ராஜ் சிங்கும் இருந்தார். ஆனால் திடீரென தோனி டி 20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கேப்டனான அவர் பல சவால்களை எதிர்கொண்டு இந்திய அணிக்கு பல வரலாற்று தருணங்களை உருவாக்கி தந்தார்” எனக் கூறியுள்ளார்.