இந்திய அணி சமீபத்தில் கண்ட மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இன்று தமிழகத்திலிருந்து நிறைய வீரர்கள் கிரிக்கெட்டை நோக்கி வருவதற்கு முன்னோடியாகவும் தற்போது அஸ்வின் விளங்கி வரும் சூழலில் தமிழ்நாடு பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் இந்த வயதிலும் ஆடி பல இளம் வீரர்களின் இன்ஸ்பிரேஷனாகவும் இருந்து வருகிறார்.
ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் இல்லாமல் இந்திய அணி தேர்வு செய்வதே கடினமான ஒன்றாக தான் உள்ளது. அந்த அளவுக்கு இந்திய மண்ணிலும், வெளிநாட்டு மண்ணிலும் தனது சுழற்பந்து வீச்சால் ஆதிக்கம் செலுத்தி வரும் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
அவருக்கு முன்பாக அணில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்) என்ற ஒரே ஒரு இந்திய பந்து வீச்சாளர் தான் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதனையும் கடந்து அஸ்வின் விரைவில் சரித்திரம் படைப்பார் என அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் மிக சிறப்பாக தனது பந்துவீச்சில் நிறைய புதிய மாற்றங்களை செய்து தயாராகும் அஸ்வின், களத்திலும் சரி வெளியேவும் சரி மிகக் கூலாக இயங்கக்கூடியவர்.
ஒரு கட்டத்தில் பல அனுபவ வீரர்களுடன் இணைந்து ஆடிய அஸ்வின், தற்போது பல இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலையும் கொடுத்து வருகிறார். இந்த ஆண்டு அடுத்தடுத்து சில முக்கியமான டெஸ்ட் தொடர்கள் வரும் நிலையில் நிச்சயம் அஸ்வின் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய பங்கு வகிக்கும் என்றும் தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் ஒரு சில வீரர்களை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்த கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது. “நான் மிக அதிர்ஷ்டமான ஆளாக கருதுகிறேன். அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் எங்கே விட்டு சென்று போனார்களோ அதைத்தான் நான் தற்போது தொடர்ந்து செய்து வருகிறேன். அவர்களிடம் இருந்து தான் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர்களது பயணத்தின் ஒரு பங்கை தான் நான் தற்போது செயல்படுத்தி வருகிறேன்.
நான் ஒரு இடத்தில் நின்று விடுவேன். அதன் பின்னர் அங்கிருந்து இன்னொருவர் முன்னெடுத்துச் செல்வார். கிரிக்கெட் பயணம் என்பது ஒரு 400 மீட்டர் ரிலே பந்தயம் போன்றது. ஒருவர் 100 மீட்டர் ஓடினால் இன்னொருவர் 100 மீட்டர்களை ஓடுவார்கள். இது ஒரு பரிமாணமாக இருப்பதால் வரும் வீரர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். என்னை விட பல மடங்கு முன்பு இருக்கும் சிறந்த வீரர் ஒருவர்தான் வருவார் என 100% நம்புகிறேன்” என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.