இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது தோனி குறித்து தெரிவித்துள்ள கருத்து ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. சர்வதேச போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடுவதற்கு முன்பாகவே தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வந்திருந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சுத் திறனை மிக சரியாக கணித்து அதனை அற்புதமாக பயன்படுத்தி இருந்த தோனி, பின்னர் அதனை சர்வதேச போட்டிகளிலும் பயன்படுத்தி பல போட்டிகளில் வெற்றி கண்டிருந்தார். ஐபிஎல் போட்டிகள் ஆரம்பத்தில் அஸ்வினின் பந்து வீச்சு எடுபடாமல் போனாலும் அவரை தளர விடாமல் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து முன்னணி பந்து வீச்சாளராக மாற்றியதில் தோனியின் பங்கும் மிக அதிகம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற போது முதல் ஓவரில் கெயில் விக்கெட் வீழ்த்தி சென்னை அணியின் வெற்றியை எளிதாக்கி இருந்தார் அஸ்வின். இப்படி சென்னை அணியின் வெற்றிக்கு பலமுறை கை கொடுத்திருந்த அஸ்வின் தற்போது தோனி பற்றி சில வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு தோனியை கடந்த 15 முதல் 17 ஆண்டுகளாக நன்றாக தெரியும். 2008 – 09 ஆண்டுகளில் எப்படி இருந்தாரோ அதே போலத்தான் அவர் இப்போதும் செயல்பட்டு வருகிறார். 2009 ஐபிஎல் தொடரில் சேன் பாண்ட் பந்து வீச்சால் கையில் காயம் அடைந்திருந்தார் தோனி. அதே போட்டியில் ஷேன் பாண்டின் விக்கெட்டை நான் வீழ்த்தி இருந்தேன்.
காயம் காரணமாக தோனியும் ஒரு சில போட்டிகளில் ஆடாமல் போக ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாறி இருந்தார். தோனி என்னை பவர்பிளே ஓவர்களில் வீசச் செய்திருந்த நிலையில், ரெய்னா அப்படி என்னை பயன்படுத்தவில்லை. முத்தையா முரளிதரனுக்கு பிறகு மிக தாமதமாக தான் எனக்கு ஓவரையும் அவர் வழங்கி இருந்தார்.
இதனால் எனது நேரமும் சிறப்பாக இல்லாமல் போக ரெய்னா தலைமையில் நான் ஆடிய போட்டிகளில் நன்றாக பந்து வீசவில்லை. இதன் பின்னர் தோனி மீண்டும் கேப்டனாக வந்ததும் ‘எனக்கு அஸ்வின் மீண்டும் வேண்டும்’ என கேட்டு என்னை அதே போல புதிய பந்தில் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசச் செய்து ஆடம் கில்க்ரிஸ்ட் விக்கெட் வரை வீழ்த்த வைத்திருந்தார்.
அதே போன்று புது பந்திலேயே பவர்பிளே ஓவர்களுக்குள் என்னை பந்து வீச செய்து பல ஆண்டுகள் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் தோனி” என அஸ்வின் கூறி உள்ளார்.